search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு
    X

    அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சந்திப்பு

    • தி.மு.க.வை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதியை ஒதுக்கியதே பெரிய விசயம்.
    • தேர்தல் பிரசாரத்துக்கு மு.க.ஸ்டாலின் அவசியம் வர வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    இதற்கான அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகளும் உடன் சென்றிருந்தனர்.

    மு.க.ஸ்டாலினை சந்தித்து விட்டு வந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நாங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தோம்.

    தேர்தல் பிரசாரத்துக்கு மு.க.ஸ்டாலின் அவசியம் வர வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டோம். அவரும் வருவதாக சொன்னார்.

    எங்களை பொறுத்தவரை வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பாகவே 'கை' சின்னத்துக்கு கடந்த 3, 4 நாட்களாக தி.மு.க. அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு, காங்கிரஸ் தொண்டர்களும், தி.மு.க. தொண்டர்களும், வாக்கு சேகரித்து பிரசாரம் செய்ததற்கு எங்களது நன்றியை தெரிவித்தோம்.

    இனிமேல் கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தை கட்சி, முஸ்லீம் லீக் இயக்கத்தை சார்ந்தவர்கள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை சந்திப்பதோடு கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம்.

    தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகனிடமும் பேசி உள்ளோம். எல்லா கூட்டணி கட்சியை சார்ந்த வர்களையும் நாங்கள் சந்திப்போம்.

    கமல்ஹாசனை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். நேரம் ஒதுக்கும்போது அவரை பார்ப்போம்.

    பதில்:-வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருக்கிறது. ஏனென்றால் தி.மு.க. கூட்டணி என்பது வலுவான கூட்டணி. அதுமட்டுமல்ல தமிழர்களுக்கும், தமிழ் நாட்டுக்கும் காவலாக, இருக்கின்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக மக்கள் முழுமையான நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள். கண்டிப்பாக அவருடைய நல்லாட்சிக்காக இந்த கூட்டணிக்கு 'கை' சின்னத்தில் மக்கள் வாக்களிப்பார்கள்.

    கேள்வி:-நீங்கள் முதலில் போட்டியிடவில்லை என்று சொன்னீர்கள்? முதல்-அமைச்சர் உங்களை பார்த்து பேசி இருந்தார். அதன் பிறகு இந்த மாற்றமா?

    பதில்:-ஏன் இந்த மாற்றம் என்பதை விரிவாக நான் சொல்ல விரும்பவில்லை. காங்கிரஸ் மேலிடம் விரும்பியது. அதனால் கூட்டணி கட்சியை சார்ந்தவர்களும் மற்றவர்களும் விரும்பிய காரணத்தால், குறிப்பாக ராகுல் காந்தி, சோனியா காந்தி, கார்கேவும் சொல்லிய காரணத்தால் அவர்கள் என் மீது வைத்திருக்கிற நம்பிக்கைக்கு நான் அடிப்பணிய வேண்டும். கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை காங்கிரஸ் பேரியக்கத்துக்கு தேடித் தருவோம்.

    கேள்வி:-நீங்கள் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. தலைமை விரும்பியதா?

    பதில்:-தி.மு.க.வை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதியை ஒதுக்கியதே பெரிய விசயம். அதற்கு நான் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். யார் வேட்பாளராக காங்கிரசில் வர வேண்டும் என்று தி.மு.கழகம் சொன்னதாக எனக்கு தெரியவில்லை.

    காரணம் காங்கிரஸ் மேலிடம்தான் முடிவெடுக்கும். அதே நேரத்தில் எங்களது மேலிடம் தி.மு.கழகத்தை கலந்து பேசி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

    கேள்வி:-எப்போது தொகுதியில் பிரசாரத்தை தொடங்க இருக்கிறீர்கள்?

    பதில்:-ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டார்கள். என்னை பொறுத்த வரை இன்றைக்கு எல்லா கூட்டணி கட்சியை சார்ந்த தலைவர்களையும் அவர்களது அலுவலகங்களில் சந்தித்துவிட்டு, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியையும் சந்தித்துவிட்டு நான் பிரசாரத்தை தொடங்குவேன்.

    கேள்வி:-ஈரோட்டில் 27-ந்தேதி தான் தேர்தல். அங்கு போட்டி வலுவாக இருக்கும் என்பதால் முன் கூட்டியே பிரசாரத்தை தொடங்கி விட்டார்களா?

    பதில்:-எங்களை பொறுத்தவரை எங்களுக்கு வெற்றி மீது நம்பிக்கை இருக்கிறது. ஆகவே வேட்பாளரை பற்றி கவலைப் படாமல் நாங்கள் யார் வேண்டுமானாலும் வேட்பாளராக இருக்கலாம்.

    காங்கிரசுக்கு ஒதுக்கி உள்ளதால் வெற்றி நிச்சயம் என்பதால் உடனடியாக தி.மு.க. தலைமையில் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டோம்.

    ஆனால் எதிர் அணியில் இருப்பவர்கள் நிற்கலாமா? வேண்டாமா? யாரை போடு வது? என்று இன்னும் முடிவு செய்யவில்லை. காரணம் அவர்கள் மிகப் பெரிய குழப்பத்தில் இருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×