உறுப்பு தானம் செய்த வாலிபரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

மூளை சாவடைந்த தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இறந்து போன தினேஷ்குமாரின் பெற்றோர் சம்மதத்துடன் அவருடைய உடல் உறுப்புக்கள் தானமாக பெறப்பட்டது.
உறுப்பு தானம் செய்த வாலிபரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
Published on

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேச்சேரி காமராஜ் பேட்டையை சேர்ந்தவர் நெசவுத் தொழிலாளி சவுண்டப்பன் (55). இவரது மனைவி ருக்மணி (52).

இவர்களுக்கு பிரியா (26), என்ற மகளும், தினேஷ் குமார் (24), கார்த்தி (22) என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் 2-வது மகன் தினேஷ்குமார் டிப்ளமோ கெமிக்கல் என்ஜினீயரிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் பார்மசி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி தினேஷ்குமார் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தினேஷ்குமார் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதில் மூளை சாவடைந்த தினேஷ்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இறந்து போன தினேஷ்குமாரின் பெற்றோர் சம்மதத்துடன் அவருடைய உடல் உறுப்புக்கள் தானமாக பெறப்பட்டது. இதையடுத்து தினேஷ்குமார் உடல் ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான மேச்சேரி நெசவாளர் காலனியில் உள்ள அவரது இல்லத்திற்கு நள்ளிரவு 1 மணிக்கு கொண்டு வரப்பட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மேட்டூர் சதாசிவம் எம்.எல்.ஏ., சப்-கலெக்டர் பொன்மணி, தாசில்தார் சுமதி, மேட்டூர் அரசு மாவட்ட மருத்துவமனை கண்காணிப்பாளர் இளவரசி, டி.எஸ்.பி. மரியமுத்து ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அருகில் உள்ள மயானத்திற்கு தினேஷ்குமார் உடல் எடுத்துச்செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யபட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com