search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணாமலையின் கருத்துக்களை தொடர்ந்து பா.ஜனதாவுக்குள் வெடிக்கும் கோஷ்டி பூசல்
    X

    அண்ணாமலையின் கருத்துக்களை தொடர்ந்து பா.ஜனதாவுக்குள் வெடிக்கும் கோஷ்டி பூசல்

    • ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்கள் விருப்பம்.
    • மாற்றத்தை கொடுக்காமல் தவறுகள் செய்ய நான் தயாராக இல்லை.

    சென்னை:

    தமிழகத்தில் அண்ணாமலையின் அதிரடி அரசியலால் பா.ஜனதா மீதான பார்வை அதிகரித்தது. அதே நேரம் கட்சிக்குள் புகைந்து கொண்டிருந்த கோஷ்டி பூசலும் கூடவே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    கடந்த வாரம் நடைபெற்ற பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பா.ஜனதா தனித்து போட்டியிட வேண்டும். கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டமும் என்னிடம் இருக்கிறது. அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் தேவை.

    கூட்டணிதான் தேவை என்று முடிவெடுத்தால் நான் ராஜினாமா செய்வேன் என்று கொஞ்சம் காட்டமாகவே பேசினார்.

    அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கும் நிலையில் அண்ணாமலை இப்படி பேசியது தலைவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது கூட்டத்தில் இருந்த அகில இந்திய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூட்டணி விசயங்களை இந்த கூட்டத்தில் பேசுவது சரியல்ல. மையக்குழு கூட்டத்தில் பேசலாம் என்றார்.

    அகில இந்திய அளவில் கூட்டணிகள் பற்றி முடிவெடுக்கும் தேசிய கமிட்டியில் வானதி சீனிவாசனும் ஒருவர். எனவே கூட்டணி பற்றிய கருத்துக்கள் தேவையற்ற பிரசனைகளை ஏற்படுத்தும் என்பதால் தான் அவர் அவ்வாறு தலையிட்டதாக கூறப்படுகிறது.

    வானதியை பொறுத்த வரை அண்ணாமலைக்கு ஆதரவாகவே ஆரம்பத்தில் இருந்தார். ஆனால் இப்போது அண்ணாமலைக்கு எதிராக செயல்படுவதுபோல் சமூக வலை தளங்களில் தகவல்கள் வெளியாகிறது.

    இதுபற்றி கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, 'கட்சியில் மாற்றுக்கருத்து, அதிருப்தி என்பதெல்லாம் இருக்கத் தான் செய்யும். ஆனால் கட்சி நலன் முக்கியம்' என்றார்கள்.

    இதற்கிடையில் அண்ணாமலையின் நெருங்கிய ஆதரவாளரான அமர்பிரசாத் ரெட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டார். அதில் தமிழகத்துக்கு தேவை ஆட்சி மாற்றம் அல்ல. அரசியல் மாற்றம். அந்த மாற்றத்தை உருவாக்கத்தான் தனது ஐ.பி.எஸ். பதவியை விட்டு விட்டு தமிழகத்துக்கு வந்தார்.

    ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்கள் விருப்பம். சூரியன் திசைமாறி உதித்தாலும் எங்கள் தலைவரின் சொல் மாறப்போவதில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று அண்ணாமலை கூறும்போது, 'மாற்றத்தை கொடுக்காமல் தவறுகள் செய்ய நான் தயாராக இல்லை. மாநில தலைவராக இருப்பதால் எனது கருத்துக்கள் தனிப்பட்ட கருத்து என சொல்ல முடியாது.

    தலைவராக என்னால் என்ன செய்ய முடியும்? என்ன செய்ய முடியாது என்ற பக்குவத்துக்கு வந்து விட்டேன். அரசியலில் இந்த பாதையில்தான் பயணிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். இதை மாற்றித்தான் ஆக வேண்டும் என்றால் அப்படிப்பட்ட அரசியல் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். வரும் நாட்களில் இன்னும் ஆக்ரோஷமாக பேசுவேன் என்று கூறினார்.

    தேர்தலை சந்திக்க தயாராக வேண்டிய நேரத்தில் கட்சிக்குள் எழுந்து வரும் இந்த கோஷ்டி பூசல் டெல்லி மேலிடத்திலும் கவலையை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

    டெல்லியில் இருந்து தமிழக அரசியல் நிலவரங்களை கவனிக்கும் மூத்த தலைவர் ஒருவர் தொடர்பு கொண்டு முதலில் ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×