search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2 ஆண்டு ஆட்சியில் முக்கால்பங்கு வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
    X

    2 ஆண்டு ஆட்சியில் முக்கால்பங்கு வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “உங்களில் ஒருவன்” கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
    • ரொம்ப மன நிறைவோடு இருக்கிறேன். ஐந்தாண்டு கால ஆட்சியில், இரண்டு ஆண்டுகள் என்பது, பாதி கூட இல்லை.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் "உங்களில் ஒருவன்" கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:-ஆட்சிக்கு வந்து இரண்டாண்டு நிறைவடைய இருக்கிறது. திரும்பிப் பார்க்கையில் என்ன மாதிரியான உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறது? எதிலெல்லாம் இன்னும் நிறைய கவனம் தேவைப்படுகிறது என நினைக்கிறீர்கள்?

    பதில்:-ரொம்ப மன நிறைவோடு இருக்கிறேன். ஐந்தாண்டு கால ஆட்சியில், இரண்டு ஆண்டுகள் என்பது, பாதி கூட இல்லை!

    ஆனால், இரண்டே ஆண்டுகளில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் முக்கால் பங்குக்கும் மேல் நிறைவேற்றி இருக்கிறோம்.

    சொன்னதை மட்டுமல்ல, சொல்லாத பல திட்டங்களையும் தீட்டி இருக்கிறோம். மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு திட்டங்களை தீட்டியது, ஒட்டுமொத்த இந்தியாவிலேயே இப்போது இருக்கின்ற தி.மு.க. அரசாகத்தான் இருக்க முடியும்.

    எதில் இன்னும் நிறைய கவனம் தேவைப்படுகிறது என்று உங்கள் கேள்வியில் கேட்டிருக்கிறீர்கள்.

    பத்தாண்டு காலமாக அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட அரசு நிர்வாகத்தை ஓரளவிற்கு மீட்டெடுத்திருக்கிறோம். இன்னும் சரிசெய்யப்பட வேண்டியது நிறைய இருக்கிறது.

    கேள்வி:-பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் தெலுங்கானாவில் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று உள்துறை மந்திரி பேசியிருக்கிறாரே? முஸ்லீம்களுக்குப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள் ஒதுக்கீடு வழங்கிய கட்சியின் தலைவராக உங்கள் கருத்து என்ன?

    பதில்:-சிறுபான்மைச் சமூகத்தினர் மீதான வன் மம்தான் இதன் மூலமாக வெளிப்படுகிறது.

    தேர்தல் அரசியல் லாபங்களுக்காக உள்துறை அமைச்சர் இவ்வாறு சொல்லி இருக்கிறார்.

    இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உமிழ்வதுதான் இந்து மக்களை திருப்திப்படுத்தும் என்று பா.ஜ.க. வினுடைய தலைமை அவர்களாகவே கற்பனை செய்திருக்கிறார்கள்.

    ஆனால், உண்மை அப்படியில்லை. பா.ஜ.க. விற்கு வாக்களிக்காத பெரும்பான்மையான மக்களும் இந்துக்கள்தான். ஆனால் அவர்கள் அமைதியையும் சகோதரத்துவத்தையும் விரும்புகிற மக்கள்.

    பா.ஜ.க. தன்னுடைய வெறுப்புணர்ச்சியை குறிப்பிட்ட சிலரிடம் திணித்து, அதுதான் ஒட்டுமொத்த மக்களுடைய மனநிலை என்று காட்ட நினைக்கிறது. அதற்கு துணையாக இருக்கிறது.

    * பொய்களையும், கற்பனைக் கதைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கின்ற பரப்புரை இயந்திரமாக சமூக ஊடகங்களில் செயல்படுகிறது பா.ஜ.க ஆதரவு கணக்குகள்.

    * பா.ஜ.க.வினுடைய ஊதுகுழலாக மாறி, ஜன நாயகத்தினுடைய நான்காவது தூண் என்பதை மறந்து, பா.ஜ.க.வை தாங்கி பிடிக்கிற சில ஊடகங்கள். இப்படி பல காரணிகள் மூலம் தன்னுடைய வெறுப்பு அரசியலை பா.ஜ.க. செய்துகொண்டு இருக்கிறது.

    மதச்சார்பின்மையை அரசியலமைப்பு நெறிமுறையாக கொண்ட நாட்டில், உள்துறை அமைச்சரே இவ்வாறு பேசுவது அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகிற செயல்!

    மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!

    கோயபல்ஸினுடைய பொய்கள் நாஜிகளுக்கு. ஆனால், உண்மை, மக்களுக்கு! இதுதான் வரலாறு சொல்கின்ற பாடம்!

    நாங்கள் மக்களை நம்புகிறோம்! இந்திய மக்களுடைய மனசாட்சி என்றைக்கும் உறங்கிவிடாது என்று நம்புகிறோம்!

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

    Next Story
    ×