search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஊதுவத்தி கம்பெனியில் ரூ.10 கோடி பொருட்கள் நாசம்- வானில் இருந்து விழுந்த எரி கற்களால் தீ விபத்து
    X

    ஊதுவத்தி கம்பெனியில் ரூ.10 கோடி பொருட்கள் நாசம்- வானில் இருந்து விழுந்த எரி கற்களால் தீ விபத்து

    • விபத்து ஏற்பட்ட தொழிற்ச்சாலையில் இருந்து 10-க்கும் மேற்பட்ட எரி கற்களை மீட்டுள்ளோம்.
    • விவசாய நிலத்தில் பயங்கர சத்தத்துடன் எரி கல் விழுந்துள்ளது.

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்டம் ராமநாயக்கன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வாசு. இவர், தெக்குப்பட்டு பகுதியில் ஊதுவத்தி தொழிற்சாலை பெரிய அளவில் நடத்தி வருகிறார்.

    இந்த தொழிற்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வெடிக்கும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலின்பேரில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சுமார் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

    இதில் தொழிற்சாலையில் இருந்து ரூ.10 கோடி பொருட்கள் எரிந்து நாசமானது.

    இது குறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையில், தீ விபத்தில் உருக்குலைந்த ஊதுவத்தி கம்பெனியில் வேலூர் நடமாடும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் ஜேம்ஸ் அந்தோணிராஜ், ஓய்வுபெற்ற தடய அறிவியல் உதவி இயக்குநர் பாரி உள்ளிட்டோர் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதில், வானில் இருந்து நெருப்பு பிழம்பாக வந்த எரிகற்கள் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதை உறுதி செய்தனர்.

    மேலும், அந்த கம்பெனியில் இருந்து எரிகற்கள் சிலவற்றையும் மீட்டனர். இவற்றை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக தடய அறிவியல் நிபுணர்கள் கூறும்போது, ''வானில் இருந்து எரி கல் தீப்பிழம்பாக எரிந்து வந்து விழுந்தை சுற்று வட்டார பகுதியில் இருந்த சிலர் பார்த்துள்ளனர்.

    அவர்களின் நேரடி சாட்சியங்களையும் பதிவு செய்துள்ளோம். சுமார் 3 கி.மீ சுற்றுவட்டாரத்தில் எரிகற்கள் விழுந்த தாக்கம் தெரிந்துள்ளது. மேலும், விபத்து ஏற்பட்ட தொழிற்ச்சாலையில் இருந்து 10-க்கும் மேற்பட்ட எரி கற்களை மீட்டுள்ளோம்.

    முதற்கட்ட ஆய்வில் அவை எரி கல் என்று உறுதியானாலும், அவற்றை முறையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக, சேகரிக்கப்பட்ட எரிகற்களை சென்னையில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பவுள்ளோம். நாட்றம்பள்ளி அருகே ஏற்கெனவே இரண்டு முறை எரிகற்கள் விழுந்துள்ளன.

    தனியார் கல்லூரியில் விழுந்த எரிகற்களால் பயங்கர சேதம் ஏற்பட்டது. கல்லூரி வாகனங்கள், கண்ணாடிகள் நொறுங்கின.

    ஊழியர்கள் சிலர் படுகாயம் அடைந்தனர். அதே பகுதியில் விவசாய நிலத்தில் பயங்கர சத்தத்துடன் எரி கல் விழுந்துள்ளது. தற்போது 3-வது முறையாக எரி கற்கள் விழுந்துள்ளது என்றனர்.

    Next Story
    ×