கம்பம் மெட்டு மலையடிவாரத்தில் சிறுத்தை வேட்டையாடியதில் கடமான் பலி? பொதுமக்கள் பீதி

வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்திவிடாமல் காக்க விவசாயிகள் சிறு குடில் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த 2015 ஆம் ஆண்டு இப்பகுதியில் சிறுத்தை நடமாடியது உறுதி செய்யப்பட்டது.
கம்பம் மெட்டு மலையடிவாரத்தில் சிறுத்தை வேட்டையாடியதில் கடமான் பலி? பொதுமக்கள் பீதி
Published on

கம்பம்:

கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு செல்லும் சாலையில், மலையடிவாரப் பகுதியில் மானாவாரி விவசாய பயிர்களான நிலக்கடலை, மொச்சை, எள் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்தப் பகுதியில் வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்திவிடாமல் காக்க விவசாயிகள் சிறு குடில் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்தப் பகுதியில் காவலுக்காக வைக்கப்பட்ட நாய்கள் காணாமல் போனது. தொடர்ந்து இன்று காலை கம்பம்மெட்டு மலைப்பாதை அடிவாரப் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் கடமான் ஒன்றை சிறுத்தை வேட்டையாடி இறைச்சியை கடித்து குதறி தின்று விட்டு தப்பி ஓடியதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கம்பம் மேற்கு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது செந்நாய் அதிகமாக இப்பகுதியில் காணப்படுவதாகவும், மானை செந்நாய் வேட்டையாடிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

அதே சமயம் மழை பெய்து வருவதால் செடி கொடிகள் அதிகமாக இருந்ததாலும் வனவிலங்குகளின் கால் தடங்களை உறுதி செய்ய முடியவில்லை. கடந்த 2015 ஆம் ஆண்டு இப்பகுதியில் சிறுத்தை நடமாடியது உறுதி செய்யப்பட்டது. அப்போது நாய்கள், வனவிலங்குகளை சிறுத்தை வேட்டையாடியதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே விவசாயிகள் மத்தியில் சிறுத்தை நடமாட்டம் குறித்த வதந்தி பரவியதால் தொழிலாளர்கள் விவசாய பணிகளுக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர். மான் எவ்வாறு இறந்தது? சிறுத்தை வேட்டையாடியதால் இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com