search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தனியார் லாரிகள் கழிவுநீரை கண்ட இடத்தில் ஊற்றினால் ரூ.25 ஆயிரம் அபராதம்
    X

    தனியார் லாரிகள் கழிவுநீரை கண்ட இடத்தில் ஊற்றினால் ரூ.25 ஆயிரம் அபராதம்

    • கண்ட இடங்களில் கழிவு நீரை வெளியேற்றி செல்லும் தனியார் கழிவுநீர் லாரிகள் பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.
    • முதல்முறை குற்றத்திற்கு ரூ.25 ஆயிரமும், 2-வது முறை தவறுக்கு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

    சென்னை:

    வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள மலக்கசடு மற்றும் கழிவு நீரை தனியார் லாரிகள் மூலம் அகற்றுவதற்கு புதிய விதிமுறைகள் வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளன. இதற்காக சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

    சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கழிவு நீரை அகற்றும் தனியார் லாரிகள் அவற்றை முறையாக எந்த இடத்தில் வெளியேற்ற வேண்டும் என்ற கட்டுப்பாட்டை பின்பற்றாமல் நீர்நிலைகள், மழை நீர் கால்வாய் பகுதியில் விட்டு விடுவதால் பாதிப்பு ஏற்படுகிறது.

    கண்ட இடங்களில் கழிவு நீரை வெளியேற்றி செல்லும் தனியார் கழிவுநீர் லாரிகள் பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அரசு அறிவித்தது.

    இதன்படி கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்களுக்கு பல்வேறு கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் 2 ஆண்டுகள் செல்லத்தக்க வாகன உரிமம் பெற வேண்டும். ரூ.2 ஆயிரம் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் 30 நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படும்.

    உரிமம் பெற்றவர் தவிர வேறுயாரும் மலக்கசடு மற்றும் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்ட விதிகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    உரிமம் பெற்ற வாகனத்தில் ஜி.பி.எஸ்.களை பொருத்த வேண்டும். கழிவு, கசடுகளை 6 ஆயிரம் லிட்டர் வரை அப்புறப்படுத்த கட்டணமாக ரூ.200-ம், அதற்கு மேல் உள்ள அளவுக்கு ரூ.300-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த சட்ட விதிகளை மீறும் தனியார் லாரி உரிமையாளர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முதல்முறை குற்றத்திற்கு ரூ.25 ஆயிரமும், 2-வது முறை தவறுக்கு ரூ.50 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    3-வது மற்றும் தொடர்ச்சியாக விதிகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று புதிய சட்டத்திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×