search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு: விற்பனையாளர் படுகாயம்
    X

    பெட்ரோல் குண்டு வீச்சில் முழுவதும் எரிந்து சேதமாகியுள்ள டாஸ்மாக் கடை.

    டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டுகள் வீச்சு: விற்பனையாளர் படுகாயம்

    • தந்தை மது பழக்கத்திற்கு அடிமையானதால் வாலிபர் ஆத்திரத்தில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார்
    • கைது செய்யப்பட்ட ராஜேஷ் ஐ.டி.ஐ. முடித்து தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு சூப்பர்வைசராக பூமிநாதன் என்பவரும், இளையான்குடி இரண்டான் குளம் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன் (வயது45) என்பவர் விற்பனையாளராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.

    நேற்று இரவு 10மணியளவில் விற்பனை முடிந்து வசூல் பணத்தை ஊழியர்கள் சரிபார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென்று 2 பெட்ரோல் குண்டுகளை கடைக்குள் வீசினார். இதில் பயங்கர சத்தத்துடன் அவை வெடித்தது. இதில் உள்ளே இருந்த மதுபாட்டில்கள் உடைந்து தீப்பற்றி எரியத் தொடங்கின.

    இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் கடையில் இருந்த அர்ஜூனனுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. பூமிநாதனுக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் டாஸ்மாக் கடையில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனாலும் கடையில் பெரும்பாலான பகுதிகள் தீயில் கருகி சேதமாகின. இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீக்காயம் அடைந்த அர்ஜூனனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜசேகர் மகன் ராஜேஷ் (23) பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. வீட்டில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பெட்ரோல் குண்டு வீசியதில் ராஜேசுக்கு முதுகில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. அவருக்கு போலீசார் முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர்.

    கைது செய்யப்பட்ட ராஜேஷ் ஐ.டி.ஐ. முடித்து தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது தந்தை ராஜசேகர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்கு சரியாக செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மது பழக்கத்தை கைவிடு மாறு ராஜேஷ் தனது தந்தையிடம் பலமுறை கூறியும் அவர் கேட்கவில்லை.

    பள்ளத்தூரில் டாஸ்மாக் கடை இருப்பதால் தான் தனது தந்தை அடிக்கடி மது குடித்து வருகிறார். டாஸ்மாக் கடை இல்லாவிட்டால் அவர் மது பழக்கத்தை கைவிட வாய்ப்புள்ளது என கருதிய ராஜேஷ் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இந்த தகவல்கள் போலீஸ் விசார ணையில் தெரியவந்தது.

    Next Story
    ×