

உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை -மூணாறு சாலையில் கடந்த சில நாட்களாக யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
மாலை மற்றும் இரவு நேரங்களில் குட்டியுடன் யானைகள் கூட்டம் கூட்டமாக நீர் தேடி அமராவதி அணைக்கு வருகின்றன. ஏழுமலையான் கோவில் சுற்று, யானைக்காடு எஸ். வளைவு பகுதிகளில் யானைகள் கூட்டமாக கடந்து செல்கின்றன.
2 நாட்களுக்கு முன்பு இரவு கேரள மாநில அரசு பஸ் மற்றும் வாகனங்களை யானைகள் வழிமறித்துள்ளன. அதிர்ஷ்டவசமாக எந்த பாதியும் ஏற்படவில்லை. அதேபோல் காட்டுமாடு, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும் அதிக அளவு தென்படுகின்றன. எனவே வாகன ஓட்டுனர்கள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், உடுமலை-மூணாறு ரோட்டில் வாகன போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் நீர் தேடி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இடம்பெயர்ந்து வருகின்றன.
மாலை, இரவு நேர ங்களில் அமராவதி அணைக்கு செல்வதற்கு யானைகள் கூட்டமாக ரோட்டை கடக்கின்றன. ரோட்டில் வன விலங்குகள் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
யானைகள் இருந்தால் சோதனை சாவடியில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. யானைகள் சென்ற பின் வாகனங்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. வாகனங்களில் செல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தி அனுப்புகிறோம் என்றனர்.