search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொழில் அதிபரிடம் ரூ.3 கோடி பறிக்க முயற்சி- முன்னாள் போலீஸ்காரர் உள்பட 8 பேரை பிடித்தது எப்படி?
    X

    கைது செய்யப்பட்டவர்களை காணலாம்

    தொழில் அதிபரிடம் ரூ.3 கோடி பறிக்க முயற்சி- முன்னாள் போலீஸ்காரர் உள்பட 8 பேரை பிடித்தது எப்படி?

    • திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தங்கம்மாபட்டி சோதனைச்சாவடியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்த ஒரு காரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர்.
    • ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சீனிவாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக இடம் வாங்குவதற்காக சென்னை பூந்தமல்லியை சேர்ந்த தீனதயாளன் என்பவரை அணுகியுள்ளார்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையூரை சேர்ந்தவர் சீனிவாசன்(44). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கலையரசி என்ற மனைவியும், ராமச்சந்திரன் என்ற மகனும், தனுஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். கடந்த 25-ந்தேதி இவர் தொழில் விசயமாக வெளியூர் சென்றுவிட்டார்.

    அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட முகமூடி கும்பல் கத்தி முனையில் குழந்தைகளை மிரட்டி பீரோக்களை உடைத்து அதிலிருந்த 41 பவுன் நகை, ரூ.18 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாவட்ட எஸ்.பி. உத்தரவின்பேரில் டி.எஸ்.பி துர்க்காதேவி, இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கொண்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

    திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தங்கம்மாபட்டி சோதனைச்சாவடியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிதிரிந்த ஒரு காரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் இருந்த நபர் முன்னுக்குபின் முரணான பதில் அளித்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ரியல் எஸ்டேட் அதிபர் சீனிவாசன் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டதை ஒத்துக்கொண்டார்.

    ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சீனிவாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக இடம் வாங்குவதற்காக சென்னை பூந்தமல்லியை சேர்ந்த தீனதயாளன் என்பவரை அணுகியுள்ளார். இவர் சர்வதேச மனிதஉரிமைகள் கழக மதுரை மண்டல பொதுச்செயலாளராக உள்ளார். மேலும் தீனதயாளனை தனது வீட்டிற்கு வரவழைத்து இடத்திற்காக ரூ.5 லட்சம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். இடம் பேசி முடிப்பதற்கு முன்பாகவே ரூ.5 லட்சம் கொடுத்ததால் சீனிவாசன் வீட்டில் பணம், நகை அதிகளவு இருக்கும் என்று உறுதி செய்தார்.

    இதனையடுத்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் உள்ள உத்தப்பநாயக்கனூரை சேர்ந்த ஜோதி என்பவரிடம் இதுகுறித்து பேசியுள்ளார். இவர் மனித உரிமைகள் அமைப்பின் மதுரை மாவட்ட செயலாளராக உள்ளார். இவருக்கு பெங்களூரு, ஓசூர், பெரம்பலூர் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்ளை கும்பலுடன் தொடர்பு இருந்துள்ளது. இவர்கள் எப்போதாவது சில முறை மட்டுமே ஒன்று சேர்ந்து கொள்ளையில் ஈடுபடுவதும், அதன்பிறகு பங்கை பிரித்துக்கொண்டு தனித்தனியாக சென்றுவிடுவதும் வாடிக்கையாக உள்ளது.

    அதன்படி சீனிவாசன் வீட்டில் கொள்ளையடிக்க தீனதயாளன், ஜோதி ஆகியோர் 16 பேரை தேர்வு செய்தனர். இதில் சென்னையில் போலீசாக வேலைபார்த்து நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்ட செல்வக்குமார், சிராஜூதீன், சதீஸ், சுரேஷ், ரகு, பாஸ்கர் உள்பட 18 பேர் கொள்ளையடிக்க முடிவு செய்தனர். இவர்கள் அனைவரும் சம்பவத்தன்று அஞ்சலி ரவுண்டானா பகுதியில் ஒன்றுகூடினர். பின்னர் அங்கிருந்து தீனதயாளன் கார் மூலம் சீனிவாசன் வீட்டிற்கு வந்தனர். வீட்டிற்குள் 5 பேர் மட்டும் சென்றுவிட மற்ற 11 பேரும் வீட்டைச்சுற்றி கண்காணித்து வந்தனர். கொள்ளையடித்த பணத்தை எடுத்துக்கொண்டு அதேகாரில் தருமத்துப்பட்டிக்கு சென்றனர். அங்கு பணத்தை பங்குபோட்டுவிட்டு சென்றுவிட்டனர். கொள்ளைநடந்த நாளில் தீனதயாளனின் கார் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

    அதனைவைத்து அந்த காரை போலீசார் கண்காணித்து வந்தனர். அப்போதுதான் இவரது கார் சோதனைச்சாவடி அருகே வந்தபோது சிக்கி கொண்டது. போலீசார் இவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் ரூ.3 கோடிக்கு மேல் பணம்-நகை இருப்பது தெரிய வந்துள்ளதால் அதனை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியிருந்தனர். ஆனால் போலீசார் அதற்குள் அவர்களை சுற்றிவளைத்துவிடவே அந்த திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

    தற்போது 8 பேர் கைது செய்யப்பட்டு வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற 8 பேர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்ளைச்சம்பவத்தில் கைவரிசை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

    Next Story
    ×