search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இரும்பு கதவு விழுந்து சிறுமி பலியான சம்பவம்- 2 பேர் கைது
    X

    இரும்பு கதவு விழுந்து சிறுமி பலியான சம்பவம்- 2 பேர் கைது

    • வணிக வளாகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வரும் காவலாளி சம்பத் கேட்டை பூட்டுவதற்காக இரும்பு கதவை சாத்தினார்.
    • வணிக வளாகத்துக்கு ஆசை ஆசையாக தந்தையை பார்க்க வந்த சிறுமி பலியான சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    சென்னை நம்மாழ்வார்பேட்டை சிவகாமிபுரம் பரகாரோடு பகுதியில் வசித்து வருபவர் சங்கர். டிரைவரான இவர் கீழ்ப்பாக்கம் ஹர்லிக்ஸ் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    அடுக்குமாடிகளை கொண்ட இந்த வணிக வளாகத்தில் ஏராளமான கடைகள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன. இந்த கட்டிடத்தில் உள்ள தனியார் துணிக்கடைக்கு சொந்தமான அடுக்குமாடி வாகன நிறுத்தும் வசதியும் வணிக வளாகத்தில் செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகன நிறுத்தும் இடத்தில் தான் சங்கர் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

    துணிக்கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் கார்களை அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்துக்கு கொண்டு சென்று விடுவது, பின்னர் அந்த கார்களை எடுத்து வந்து வாடிக்கையாளர்களிடம் ஒப்படைப்பது போன்ற பணிகளை சங்கர் செய்து வந்தார்.

    தினமும் வேலை முடிந்ததும் கணவர் சங்கரை அழைத்துச் செல்ல மனைவி வாணி, வணிக வளாகத்துக்கு வருவார். இதன்படி நேற்று இரவு 9 மணி அளவில் வாணி வந்தார்.

    அப்போது தந்தையை பார்ப்பதற்காக 5 வயது மகளான ஹரிணியும் உடன் வந்திருந்தார். இருவரும் சங்கரை எதிர்பார்த்து வணிக வளாகத்தின் வாயிலில் இரும்பு கதவு அருகே நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது வணிக வளாகத்தில் காவலாளியாக பணிபுரிந்து வரும் 65 வயது காவலாளி சம்பத் என்பவர் கேட்டை பூட்டுவதற்காக இரும்பு கதவை சாத்தினார். இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக இரும்பு கதவு திடீரென கீழே விழுந்தது. இதில் சிறுமி ஹரிணி சிக்கிக்கொண்டாள்.

    இதனை பார்த்த தாய் வாணி கூச்சல் போட்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் ஓடி வந்து சிறுமியை மீட்டனர். இரும்பு கதவு வேகமாக விழுந்ததில் சிறுமி ஹரிணியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

    இதுபற்றி அறிந்ததும் சங்கரும் ஓடிவந்தார். மகளின் தலையில் இருந்து ரத்தம் பீரிட்டு வெளியேறியதை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர். உடனடியாக அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ஹரிணியை சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹரிணிக்கு டாக்டர்கள் தலையில் கட்டு போட்டு சிகிச்சை அளித்தனர். சிறுமியின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

    நள்ளிரவு 1.15 மணி அளவில் சிறுமி ஹரிணி உயிரிழந்தார். இதுபற்றி கேள்விப்பட்டதும், தந்தை சங்கர், தாய் வாணி ஆகியோர் கதறி அழுதனர். வணிக வளாகத்துக்கு ஆசை ஆசையாக தந்தையை பார்க்க வந்த சிறுமி திடீரென பலியான சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 304 ஏ.ஐ.பி.சி. (விபத்து மரணம்) என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இரும்பு கதவை சாத்திய காவலாளி சம்பத் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இரும்பு கதவு விழுந்தது எப்படி? என்பது குறித்து வணிக வளாக பொறுப்பாளர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் கட்டிட காவலாளி மற்றும் துணிக்கடையின் மேலாளர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×