search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பேச்சிப்பாறை வனப்பகுதிகளில் 5 நாட்களாக பற்றி எரியும் தீ- கட்டுப்படுத்த மலைவாழ் மக்கள் கோரிக்கை
    X

    காட்டு பகுதியில் பற்றி எரியும் தீ.

    பேச்சிப்பாறை வனப்பகுதிகளில் 5 நாட்களாக பற்றி எரியும் தீ- கட்டுப்படுத்த மலைவாழ் மக்கள் கோரிக்கை

    • வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீ அரசு ரப்பர் கழக பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது.
    • வனப்பகுதிகளில் பற்றி எரியும் தீயினால் வன விலங்குகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    திருவட்டார்:

    பேச்சிப்பாறையை சுற்றி உள்ள வனப்பகுதிகளான கோதையாறு, குற்றியாறு, மோதிரமலை, தச்சமலை போன்ற மலை பகுதிகள் பல உள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் வனப்பகுதிகளில் திடீர் என்று தீ பற்றி எரிகிறது. இதை அணைத்து கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை குமரி மாவட்ட வனப்பகுதிகளில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து தீ எரிந்து வருகிறது.

    இந்த தீ கோதையாறு, குற்றியாறு வனப்பகுதிகளில் அதிகமாக எரிகிறது. இதனால் விலை உயர்ந்த மரங்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளன. மேலும் வன விலங்குகள், மற்றும் பிராணிகள், மரங்களில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் பறவையினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில் வனப்பகுதிகளில் எரியும் தீயை வனத்துறையினர் தளைகளை வெட்டி அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் முழுமையான பலன் கிடைக்கவில்லை.

    ஒரு புறம் தளைகளை வெட்டி அகற்றினாலும் மறுபுறம் தீ எரிகிறது. மேலும் உள்காடுகளில் சென்று தீயை அணைப்பதும் அவ்வளவு எளிதான செயல் அல்ல. வனத்துறையினர் கூடுதலாக வெளி மாவட்ட வனத்துறை ஊழியர்களை கொண்டு வந்து தீ அணைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று வன ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இந்நிலையில் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீ அரசு ரப்பர் கழக பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. இதனால் அதிக அளவு சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அரசு ரப்பர் கழகம் குற்றியாறு பிரிவு கூப்பு எண் 60 மற்றும் 61-ல் ஏராளமான ரப்பர் மரங்கள் மற்றும் ரப்பர் செடிகள் தீயில் கருகியுள்ளதாக ரப்பர் கழக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    இதே போன்று நேற்று மோதிரமலை மேல்பகுதியில் தீ பரவியுள்ளதாகவும், பழங்குடி மக்களுக்கு தீயினால் பழங்குடி மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுவதால் பழங்குடி மக்கள் தரப்பில் தெரிவித்தனர். இதனால் அதிக அளவில் பொருள் சேதமும், உயிர் சேதமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில் ரப்பர் கழக பகுதிகள் மற்றும் பழங்குடி பகுதிகளில் யானைகள் மற்றும் வன விலங்குகளில் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் வனப்பகுதியில் தீ வைக்கப்பட்டதா எனவும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வனப்பகுதிகளில் பற்றி எரியும் தீயினால் வன விலங்குகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில் குமரி வனப்பகுதிகளில் 5 நாட்களுக்கு மேலாக எரியும் தீ வனத்திற்கு பேரிழப்பாக அமைந்துள்ளதாகவே கூறப்படுகிறது. இந்நிலையில் தீ மேலும் பரவாமல் இருக்கும் வகையில் நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி தீயை அணைக்க வனத்துறையினர் முன்வர வேண்டுமென்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் மலைவாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குமரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்யும் என வானிலை அறிவிப்புகள் தெரிவித்த போதிலும் ஓரிரு துளிகளுடன் மழை நின்று விட்டது. கன மழை அல்லது சாரல் மழை பெய்திருந்தால் வனத்திற்குள் ஏற்பட்டுள்ள தீ அணையும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும். எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து காட்டுக்குள் பரவி வரும் தீயை உடனே கட்டுபடுத்த வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

    Next Story
    ×