search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு இடைத்தேர்தல்: கட்சி நிர்வாகிகளுக்கு தினமும் 500 ரூபாய் - பிரியாணி
    X

    ஈரோடு இடைத்தேர்தல்: கட்சி நிர்வாகிகளுக்கு தினமும் 500 ரூபாய் - பிரியாணி

    • ஈரோட்டில் உள்ள உள்ளூர் கட்சிக்காரர்களுக்கும் பொறுப்பாளர்கள் தான் பணம் செலவழிக்கின்றனர்.
    • ஈரோடு இடைத்தேர்தலில் பணம் தண்ணீராக செலவு செய்யப்பட்டு வருவதால் அங்கு பணப்புழக்கம் அதிகரித்து உள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனுதாக்கல் தொடங்கி விட்டதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது.

    இந்த தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டு உள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில்முருகன் நிறுத்தப்பட்டு உள்ளார். அ.ம.மு.க. கட்சி சார்பில் சிவபிரசாந்த் அறிவிக்கப்பட்டு உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா நவநீதன் போட்டியிடுகிறார்.

    வேட்பு மனுதாக்கலுக்கு 7-ந்தேதி கடைசி நாள் என்பதால் ஒவ்வொரு கட்சி நிர்வாகிகளும் ஈரோட்டில் முகாமிட்டு தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதற்காக வெளியூர்களில் இருந்து ஒவ்வொரு கட்சி சார்பிலும் ஏராளமான நிர்வாகிகள் ஈரோட்டில் முகாமிட்டு உள்ளனர்.

    தி.மு.க.வில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மாவட்டச் செயலாளர்கள், வாரிய தலைவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்கடன் தங்கி உள்ளனர். காங்கிரஸ் கட்சியிலும் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள், ஈரோட்டில் முகாமிட்டு உள்ளனர்.

    அ.தி.மு.க.விலும் எடப்பாடி பழனிசாமி அணியில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முகாமிட்டு தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் ஒவ்வொரு கட்சியிலும் தலைமைக் கழக நிர்வாகிகள் முதற்கொண்டு கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஏரியாவுக்கு சென்று தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு தொகுதியில் 238 வாக்குச்சாவடிகள் உள்ளதால் ஒவ்வொரு கட்சியிலும் முக்கியஸ்தர்களுக்கு 10, 15 வாக்குச்சாவடிகள் என்ற வகையில் பிரித்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    அந்த பட்டியலுக்கு ஏற்ப சமுதாய ஓட்டுகள் எவ்வளவு என்ற விவரமும் அவர்கள் கைவசம் உள்ளது. இந்த பட்டியலுக்கு ஏற்ப கட்சி நிர்வாகிகளை அனுப்பி வாக்குகள் கேட்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    அங்கு சென்றுள்ள அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் முதற்கட்டமாக உள்ளூர் கட்சிக்காரர்கள், கூட்டணி கட்சிக்காரர்களிடம் ஆலோசனை நடத்தி செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி முடித்துள்ளனர்.

    இதன் அடுத்தகட்டமாக வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர் பட்டியலை வைத்து கொண்டு வீடு வீடாக கட்சி நிர்வாகிகள் சரி பார்த்து வருகின்றனர்.

    யாரும் வீடு மாறி இருக்கிறார்களா? அல்லது அதே முகவரியில் வசிக்கிறார்களா? என்பதை உறுதிப்படுத்தி வருகின்றனர். இந்த பணிகளை மேற்பார்வையிட ஒவ்வொரு கட்சியிலும் கட்சி நிர்வாகிகள் ஈரோட்டில் முகாமிட்டு உள்ளனர்.

    ஒவ்வொரு 'பூத்' வாரியாக கட்சி நிர்வாகிகள் பணியாற்றி வருவதால் அவர்களுக்கு தினமும் 3 வேளை சாப்பாடு, 500 ரூபாய் பணம் கொடுக்கப்படுகிறது. இரவில் தினமும் மதுவும் உண்டு.

    கட்சி நிர்வாகிகளை யார் அழைத்து வந்திருக்கிறார்களோ அவர்கள்தான் இதை செலவை செய்து வருகின்றனர். அந்த வகையில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு தினமும் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சம் வரை செலவாகிறது.

    செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினால் அதற்கு குறைந்தபட்சம் ரூ.1½ லட்சம் செலவு செய்யப்படுகிறது. இந்த செலவுகள் அனைத்தும் அந்த பகுதியை கவனித்து கொள்ளும் பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அந்த வகையில் தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சியிலும் ஒவ்வொரு பிரமுகர்களும் பணத்தை செலவு செய்து வருகின்றனர்.

    ஈரோட்டில் உள்ள உள்ளூர் கட்சிக்காரர்களுக்கும் பொறுப்பாளர்கள் தான் பணம் செலவழிக்கின்றனர். இதனால் ஒவ்வொருவருக்கும் பணம் அதிகமாக செலவாகி வருகிறது.

    இதுகுறித்து கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், "தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு பிரமுகர்களுக்கும் குறைந்தபட்சம் 10 லட்சத்தில் இருந்து 50 லட்சம் வரை செலவாகிறது.

    ஓட்டுக்காக கொடுக்கப்படும் மட்டும் பணம் தான் கடைசியில் தருவார்கள். மற்ற செலவுகள் அனைத்தையும் அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    கட்சி பதவிக்கு ஏற்ப பொறுப்புக்கு ஏற்ப ஒவ்வொருவரும் செலவு செய்து வருகின்றனர். இது தவிர்க்க முடியாத ஒன்று" என்றார்.

    இதனால் ஈரோடு இடைத்தேர்தலில் பணம் தண்ணீராக செலவு செய்யப்பட்டு வருவதால் அங்கு பணப்புழக்கம் அதிகரித்து உள்ளது.

    Next Story
    ×