என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மின்சாரம் தாக்கி பலியான யானை.
கூடலூர் அருகே மின்சாரம் தாக்கி யானை பலி
- பாக்கு மரத்தை யானை தனது தலையால் மோதி சாய்க்க முயன்றது.
- யானையின் உடல் கூராய்வு செய்யப்பட்டது. பின்னர் யானை உடல் புதைக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பிதுர்காடு பகுதியில் நேற்று ஆண் யானை ஒன்று வலம் வந்தது. வனப்பகுதியில் நின்ற மரங்களை முறித்து சாப்பிட்டது.
அங்கு நின்ற பாக்கு மரத்தை யானை தனது தலையால் மோதி சாய்க்க முயன்றது. அப்போது அந்த பகுதியில் சென்ற மின் கம்பி அறுந்து எதிர்பாராதவிதமாக யானை மீதே விழுந்தது. இதில் யானை மீது மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தது.
இன்று காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் யானை இறந்து கிடப்பது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று யானையின் உடலை மீட்டனர். அந்த இடத்திலேயே யானையின் உடல் கூராய்வு செய்யப்பட்டது. பின்னர் யானை உடல் புதைக்கப்பட்டது.
அந்த பகுதியில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மின்சாரம் தாக்குதலில் இருந்து வன விலங்குகளை காப்பதற்காக கடந்த வாரம் வனத்துறையினரும், மின்சாரத் துறையினரும் இணைந்து ஆய்வுப்பணி மேற்கொண்டனர். இந்தநிலையில் அங்கு மேலும் ஒரு யானை உயிரிழந்தது வனத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.






