பழனி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்- 2 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்

பழனியில் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்காக பக்தர்கள் குவிகின்றனர்.மலைக்கோவிலில் கட்டண தரிசனத்திற்காக காத்திருக்கும் இடத்தில் நிழற்குடை இல்லை.
பழனி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்- 2 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்
Published on

பழனி:

தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வருடம் முழுவதும் திருவிழா கோலம் பூண்டிருக்கும். பழனியில் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்காக பக்தர்கள் குவிகின்றனர்.

நேற்று சஷ்டியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று மாத கார்த்திகை என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் பஸ்நிலையம், அடிவாரம், கிரிவீதி, மலைக்கோவில், திருஆவினன்குடி, ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

மலைக்கோவிலில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பகல்பொழுதில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பழனிக்கு வரும் பக்தர்கள் வெயிலில் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மலைக்கோவிலில் கட்டண தரிசனத்திற்காக காத்திருக்கும் இடத்தில் நிழற்குடை இல்லை. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் நீண்டநேரம் வெயிலிலேயே காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. சோர்வடையும் பக்தர்கள் கட்டண தரிசனத்திற்கு டிக்கெட் எடுத்தபோதும் இலவச தரிசன வரிசையில் நிழல் இருந்ததால் அந்த வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.

எனவே கோடைகாலம் தொடங்கியுள்ளநிலையில் மலைக்கோவிலில் பக்தர்கள் வசதிக்கு நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com