search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் மோதல்: ஏ.டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர்களை ஓட ஓட விரட்டி தாக்கிய கும்பல்

    • ஏ.டி.எஸ்.பி மற்றும் 2 இன்ஸ்பெக்டர்களை கல்வீசி விரட்டி விரட்டி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இருவரும் பயங்கரமாக தாக்கி கொண்டதால் அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்தநாள்விழா நேற்று கொண்டாடப்பட்டது. பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அம்பேத்கார் சிலைக்கு பல்வேறு தரப்பினரும் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இரவில் முளைப்பாரி எடுத்து வானவேடிக்கை முழங்க பலர் ஊர்வலமாக வந்தனர். அப்போது யார் முதலில் சென்று அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவது என்பதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் பயங்கரமாக தாக்கி கொண்டதால் அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    அதன்பிறகு இருதரப்பினரும் கலைந்து சென்றபோது போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்கினர். அப்போது போலீஸ் நிலையத்தில் காவலர்கள் இல்லாததால் அங்கிருந்த மோட்டார் சைக்கிள், போலீஸ் வாகனம், 108 ஆம்புலன்ஸ் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கினர். மேலும் அவ்வழியாக வந்த அரசு பஸ் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறிஅடித்து ஓட்டம் பிடித்தனர்.

    போலீசார் கல்வீசி தாக்கியவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் போலீசாரையும் அந்த கும்பல் கல்வீசி தாக்கினர். ஏ.டி.எஸ்.பி மற்றும் 2 இன்ஸ்பெக்டர்களை கல்வீசி விரட்டி விரட்டி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் மீனாட்சி மற்றும் போலீசார் பலத்த காயமடைந்தனர். இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி அபினவ்குமார், மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஸ்டோங்கரே வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டனர்.

    இதனையடுத்து இரவு முழுவதும் விடியவிடிய தேடுதல் வேட்டை நடத்தி கலவரத்தில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த 70 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் போலீசாரிடம் ஒருதரப்பை சேர்ந்தவர்களை மட்டுமே அதிகளவில் கைது செய்திருப்பதாக கூறி வாக்குவாதம் செய்தனர்.

    கல்வீச்சு சம்பவத்தால் பெரியகுளத்தில் பதட்டமான சூழல் உருவானதால் அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இன்றும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் முக்கிய இடங்களில் பேரிகார்டுகளை போட்டு பிரச்சினை ஏற்படாத வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டு அம்பேத்கார் பிறந்தநாள்விழாவில் இதேபோன்று மோதல் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வந்தனர் என்றும், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த ஆண்டு இரவு நேரத்தில் பிரச்சினைக்குரிய இடத்தில் அதிகளவு மக்களை அனுமதித்தால் கலவரம் வெடித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    Next Story
    ×