வாய்க்காலில் பஸ் கவிழ்ந்து சிறுவன் உள்பட 2 பேர் பலி- 40 பேர் படுகாயம்

திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர வளைவில் இருந்த தடுப்பு கம்பியில் மோதி வாய்க்காலில் கவிழ்ந்தது.போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வாய்க்காலில் பஸ் கவிழ்ந்து சிறுவன் உள்பட 2 பேர் பலி- 40 பேர் படுகாயம்
Published on

தஞ்சாவூர்:

கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த கிறிஸ்தவர்கள் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்தில் இன்று நடைபெறும் குருத்தோலை ஞாயிறு பவனியில் கலந்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு டிரைவர், வழிக்காட்டுனருடன் 49 பேர் பஸ்சில் திருச்சூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு புறப்பட்டனர். மொத்தம் 51 பேர் பஸ்சில் இருந்தனர்.

அந்த பஸ் இன்று அதிகாலை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த ஒக்கநாடு கீழையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர வளைவில் இருந்த தடுப்பு கம்பியில் மோதி வாய்க்காலில் கவிழ்ந்தது.

பஸ்சில் இருந்தவர்கள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுக்குள் சிக்கியவர்களை ஒவ்வொருவறாக பஸ்சில் இருந்து வெளியே மீட்டனர்.

இந்த விபத்தில் திருச்சூரை சேர்ந்த வர்க்கீஸ் மனைவி லில்லி (வயது 63), ஜோசப் மகன் ராயன் (9) ஆகிய 2 பேரும் உடல்நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாகினர். 40-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதில் சிலருக்கு கை, கால் துண்டானது. விபத்துக்குள்ளான பஸ்சும் சேதமடைந்தது.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னா மற்றும் ஒரத்தநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பலியான 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பலத்த காயமடைந்தவர்களை தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, மன்னார்குடி, ஒரத்தநாடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் சிலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com