

ராமேசுவரம்:
தமிழக மீனவர்கள் ஒவ்வொரு முறை கடலுக்கு செல்லும்போதும் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவதும், பல நேரங்களில் தாக்கி விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
கடந்த 6 மாதங்களில் எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 116 மீனவர்களை படகுகளுடன் இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றது.
அவர்கள் அங்குள்ள நீதி மன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு ஊர்க்காவல்துறை, பருத்தித்துறை, மன்னார் ஆகிய பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்களை விடுதலை செய்ய வேண்டியும், படகுகளை விடுவிக்க கோரி மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரம், பாம்பன், தங்கச்சி மடம், மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் ஆர்ப்பாட்டம், வேலைநிறுத்தம் போன்றவற்றை நடத்தினர்.
இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை நல்லெண்ண அடிப்படையிலும், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டும் விடுதலை செய்ய இலங்கை அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.
மீனவர்களை விடுவிப்பதற்கான ஆவணங்களை இலங்கை அரசு இன்னும் சில நாட்களில் கோர்ட்டில் சமர்ப்பிக்கும்.
அதன் பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 116 மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ராமேசுவரத்தில் உள்ள நிரபராதி மீனவர் விடுதலை கூட்டமைப்பு தலைவர் அருளானந்தம் கூறுகையில், இலங்கை சிறையில் உள்ள தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 116 மீனவர்களையும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய இலங்கை அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இலங்கை அரசு விரைவில் வெளியிடும் என்றார்.