என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்தியாவுடன் விளையாடுவதற்கு ஐசிசி-யிடம் 3 நிபந்தனைகளை வைத்த பாகிஸ்தான்
    X

    இந்தியாவுடன் விளையாடுவதற்கு ஐசிசி-யிடம் 3 நிபந்தனைகளை வைத்த பாகிஸ்தான்

    • வருவாய் பகிர்வை அதிகரித்து தர வேண்டும் என்பது முதல் கோரிக்கையாகும்.
    • இந்தியா-பாகிஸ்தான் இரு தரப்பு கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது 2-வது கோரிக்கையாகும்.

    இஸ்லாமாபாத்:

    10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் 20 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் வருகிற 15-ந்தேதி கொழும்பில் மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) எச்சரித்து இருந்தது. ஆனாலும் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.

    வங்க தேசத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

    இதற்கிடையே இந்தியாவுடன் விளையாட மறுக்கும் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் ஐ.சி.சி. பேச்சுவார்த்தை நடத்தியது.

    ஐ.சி.சி. துணை தலைவர் இம்ரான் குவாஜா அசோசியேட் உறுப்பினர் இயக்குநரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட்டின் பொதுச் செயலாளருமான முபாஷிர் உஸ்மானி ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின நக்வியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவா் அமினுல் இஸ்லாமும் மோசின் நக்வியுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஐ.சி.சி. பாகிஸ்தான் இடையே பேச்சுவாா்த்தை நடத்தும் முன்பாக நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது.

    இதே போல ஐ.சி.சி. துணைத் தலைவா், அமினுல் இஸ்லா முடனும் பேச்சுவாா்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.

    இந்தியாவுடனான போட்டி புறக்கணிப்பு முடிவை கைவிட ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 3 நிபந்தனையை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    வருவாய் பகிர்வை அதிகரித்து தர வேண்டும் என்பது முதல் கோரிக்கையாகும். இந்தியா-பாகிஸ்தான் இரு தரப்பு கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது நக்வியின் 2-வது நிபந்தனையாகும். மேலும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க வேண்டும் என்று மற்றொரு கோரிக்கையாகும்.

    அதே நேரத்தில் பாகிஸ்தான் அரசின் முடிவே இறுதியானது என்றும் ஐ.சி.சி.யிடம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மோசின் நக்வி இன்று பாகிஸ்தான் பிரதமரை சந்திக்கிறார். இந்த ஆலோசனைக்கு பிறகே முடிவு தெரிய வரும்.

    Next Story
    ×