என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

சாய் சுதர்சன் அபாரம்: 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது குஜராத்
- முதலில் ஆடிய குஜராத் 20 ஓவரில் 217 ரன்கள் குவித்தது.
- தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அகமதாபாத்:
நடப்பு ஐபிஎல் சீசனின் 23-வது போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் அதிரடியாக ஆடி 53 பந்தில் 82 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஜாஸ் பட்லர், ஷாருக் கான் தலா 36 ரன்கள் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் ராகுல் டெவாட்டியா 12 பந்தில் 24 ரன்கள் குவித்தார்.
ராஜஸ்தான் சார்பில் துஷார் தேஷ்பாண்டே, மகேஷ தீக்ஷனா தலா 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்கியது. ஜெய்ஸ்வால் 6 ரன்னிலும், நிதிஷ் ரானா ஒரு ரன்னிலும் அவுட்டாகினர்.
3-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சனுடன் ரியான் பராக் இணைந்தார். ரியான் பராக் 14 பந்தில் 26 ரன்கள் எடுத்து அவுட்டானார். சஞ்சு சாம்சன் 41 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஹெட்மயர் தனி ஆளாகப் போராடினார். அவர் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசி அரை சதம் கடந்து 52 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 159 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. குஜராத் அணி பெறும் 4வது வெற்றி இதுவாகும்.
குஜராத் அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், ரஷித் கான், சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.






