4வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா

தென் ஆப்ரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. #SAvsIND
4வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா
Published on

தென் ஆப்ரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ரோகித் சர்மா 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். தவான், கோலி இருவரும் அரைசதம் கடந்தனர்.

இடையில் மழையின் காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் போட்டி தொடங்கிய சிறிது நேரத்தில் கோலி ஆட்டமிழந்தார். அவர் 83 பந்துகளில் 75 ரன்கள் (7 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) எடுத்தார்.

கோலி, தவான் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய தவான் சதம் அடித்தார். இது அவரது 13-வது சதமாகும்.

அவரை தொடர்ந்து ரகானே களமிறங்கினார். சதமடித்த தவான் 109 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 11 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடித்திருந்தார். அவரைத்தொடர்ந்து ரகானேவும் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் டோனி மட்டும் ஓரளவு விளையாடினார்.

இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது. டோனி 42 ரன்களுடன் களத்தில் இருந்தார். தென்ஆப்ரிக்கா அணி பந்துவீச்சில் ரபாடா, நிகிடி ஆகியோர் தலா 2 விக்கெட்களும், மோர்னே மார்கல், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 290 ரன்களை இலக்காக கொண்டு தென்ஆப்ரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மார்க்ரமும்  ஆம்லாவும் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே அடித்து ஆடினர். அணியின் எண்ணிக்கை 42 ஆக இருந்தபோது, மார்க்ரம் பும்ரா பந்துவீச்சில் அவுட்டானார். அப்போது இடியுடன் கூடிய மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அதன்பின், சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு ஆட்டம் தொடங்கியது. தென் ஆப்ரிக்கா 28 ஓவர்களில் 202 என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. அவரை தொடர்ந்து களமிறங்கிய டுமினியை குல்தீப் 10 ரன்களில் அவுட்டாக்கினார். அதன்பின் டி வில்லியர்ஸ் களமிறங்கினார். அணியின் எண்ணிக்கை 77 ஆக இருக்கும்போது ஆம்லாவை 33 ரன்களில் குல்தீப் அவுட்டாக்கினார்.

அதன்பின் களமிறங்கிய டேவிட் மில்லர் அதிரடியாக ஆடினார். இருவரும் சேர்ந்து சிக்சர், பவுண்டரியாக விளாசினர். அணியின் எண்ணிக்கை 102 ஆக இருக்கும்போது டி வில்லியர்ஸ் பாண்ட்யாவிடம் அவுட்டானார். அவரை தொடர்ந்து கிளாசன் இறங்கினார்.

அதிரடியாக ஆடிய டேவிட் மில்லருக்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. சாஹல் வீசிய பந்தை மில்லர் தூக்கியடிக்க, எல்லை கோட்டின் அருகில் நின்ற ஷ்ரேயஸ் ஐயர் தவறவிட்டார். இதேபோல், சாஹல் பந்து வீச்சில் மில்லர் கிளீன் போல்டானார். ஆனால் அது நோ பால் என தெரிய வந்ததால் மில்லர் தப்பினார்.

இதையடுத்து, இந்திய பந்து வீச்சை இருவரும் திறமையாக அடித்து ஆடினர். 174 ரன்னாக இருக்கும்போது டேவிட் மில்லர் சாஹல் பந்துவீச்சில் எல் பி டபிள்யு ஆனார். அவர் 28 பந்துகளில் 2 சிக்சர், 4 பவுண்டரியுடன் 39 ரன்கள் எடுத்தார். அவரை தொடர்ந்து பெலுகுவாயோ களமிறங்கினார். அப்போது தென் ஆப்ரிக்கா 26 பந்துகளில் 28 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது.

ஒருபுறம் கிளாசன் அதிரடியாக ஆட, பெலுகோவியாவும் அடித்து ஆடினார். இருவரும் சேர்ந்து கடைசி 11 பந்துகளில் 33 ரன்கள் எடுக்க, தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றது. அந்த அணி 25.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கிளாசன் 27 பந்துகளில் ஒரு சிக்சர், 5 பவுண்டரியுடன் 42 ரன்களுடனும், பெலுகோவியா 5 பந்துகளில் 3 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 23 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், பும்ரா, பாண்ட்யா, சாஹல் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருதை கிளாசன் பெற்றார். நூறாவது போட்டியில் சதமடித்த ஷிகார் தவானின் ஆட்டம் வீணானதே என ரசிகர்கள் வேதனையில் ஆழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com