தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பந்த் நடத்த வேண்டும்: சவுந்தரராஜன்

தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பந்த் நடத்த வேண்டும்: சவுந்தரராஜன்

சேலம் உருக்காலை பொதுத்துறை நிறுவனமாக நீடிக்க தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து பந்த் நடத்த வேண்டும் என்று சி.ஐ.டி.யூ.மாநில தலைவர் சவுந்தரராஜன் கூறினார்.
Published on

சேலம்:

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு சி.ஐ.டி.யூ.சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ.மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் சுகுமாறன், மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றினர்.

இதனை தொடர்ந்து மாநில தலைவர் சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பொதுத்துறை நிறுவனங்களை மாநில அரசு மற்றும் மத்திய அரசு தனியாருக்கு விற்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதில் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதிக லாபம் கிடைக்கிறது. அரசின் இந்த தவறான கொள்கை முடிவை மாற்ற வேண்டும்.

லாபத்தில் இயங்கும் சேலம் உருக்காலையை நஷ்டத்தில் இயங்குவதாக போலி கணக்கு காட்டி அரசு தனியாருக்கு விற்க கூடாது. தொடர்ந்து லாபகரமாக இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு சதி செய்து சேலம் உருக்காலையை முடக்க முயற்சிக்கிறது. உருக்காலையை விற்க தமிழக சட்டமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும் இது தொடர்பாக தமிழக எம்.பி.க்கள் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பந்த் நடத்தி சேலம் உருக்காலையை பொதுத்துறை நிறுவனமாக நீடிக்க உதவ வேண்டும். இந்த உருக்காலையை நம்பியுள்ள 5 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அரசு பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேட்டி அளித்தார். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com