ரூ.2 கோடி லஞ்சம் பெற்று சசிகலாவுக்கு சிறப்பு வசதியா?: கர்நாடக ஜெயில் அதிகாரி விளக்கம்

ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக கூறும் குற்றச்சாட்டு குறித்து கர்நாடக ஜெயில் அதிகாரி டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் விளக்கம் அளித்துள்ளார்.
ரூ.2 கோடி லஞ்சம் பெற்று சசிகலாவுக்கு சிறப்பு வசதியா?: கர்நாடக ஜெயில் அதிகாரி விளக்கம்
Published on

ஜெயலலிதா மறைவுக்குப் பின் சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜெயிலில் சசிகலாவுக்கு பல்வேறு சலுகைகளும், சிறப்பு வசதிகளும் அளிக்கப்படுவதாக அவ்வப்போது புகார்கள் கூறப்பட்டு வந்தன.

சிறை விதிகளை மீறி அவரை உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், வக்கீல்கள் அடிக்கடி சந்திப்பதாகவும் கூறப்பட்டது. இதுபற்றி கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் எந்த பதிலும் அளிக்காமல் இருந்தது.

இந்த நிலையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹாரா ஜெயில் புதிய டி.ஐ.ஜி.யாக ரூபா என்ற பெண் அதிகாரி சில வாரங்களுக்கு முன் பொறுப்பேற்றார். அவர் கடந்த 10-ந்தேதி ஜெயில் முழுவதும் சென்று அதிரடி சோதனை நடத்தினார். அப்போது ஜெயிலில் விதிமீறல்கள் நடைபெறுவதை கண்டு பிடித்தார்.

சசிகலாவுக்கு ஜெயிலில் தனி சமையல் அறை அமைத்து கொடுத்து இருப்பதாகவும் அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி வரை உயர் அதிகாரிகள் லஞ்சம் பெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறி உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி.யாக இருக்கும் மூத்த அதிகாரி எச்.சத்திய நாராயண ராவ் மீதும் லஞ்சப் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

டி.ஐ.ஜி. ரூபா எழுதிய கடித முழு விவரம் வருமாறு:-

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு தனியாக சிறப்பு சமையல் அறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர் விரும்பும் உணவை தயார் செய்து கொடுப்பதற்காக அவருக்கு உதவியாக சில பெண் கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்காக நீங்கள் (கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ்) ரூ. 2 கோடி வரை லஞ்சம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி நீங்கள் லஞ்சம் பெறவில்லை என்றால் சிறையில் சமையல் அறை வசதியை செய்து கொடுத்த அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதன் மூலம் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை போக்க நீங்கள் முன்வரவேண்டும்.

சிறை விதிகளின்படி இந்த சலுகைகளை செய்து கொடுப்பது தவறு. நான் ஆய்வுக்கு சென்று வந்த பிறகும் இந்த சலுகை தொடருகிறது.

இவ்வாறு அந்த கடிதத்தில் ரூபா குறிப்பிட்டு உள்ளார்

டி.ஐ.ஜி. ரூபா எழுதிய கடித விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கடிதம் எழுதியது உண்மையா? என்று டி.ஐ.ஜி. ரூபாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

சிறைத்துறை டி.ஜி.பி.க்கு நான் கடிதம் எழுதியது உண்மைதான். இந்த கடிதத்தின் நகல்களை ஊழல் தடுப்பு பிரிவு (லோக் ஆயுக்தா) அதிகாரிகளுக்கும், கர்நாடக போலீஸ் டி.ஜி.பி.க்கும் அனுப்பி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

டி.ஐ.ஜி. ரூபாவின் குற்றச்சாட்டு குறித்து சிறைத்துறை போலீஸ் டி.ஜி.பி. சத்ய நாராயணராவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

இது போன்ற புகார்கள் எதுவும் எனக்கு தெரியாது. அவர் கூறிய குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அது வதந்திதான். டி.ஐ.ஜி. அனுப்பிய அறிக்கையும் எனக்கு வரவில்லை. சசிகலாவுக்கு ஜெயிலில் சிறப்பு வசதியோ, சலுகையோ அளிப்பது சாத்தியமில்லை. இந்த நேரம் வரை டி.ஐ.ஜி.யின் அறிக்கை எனக்கு வந்து சேரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

டி.ஐ.ஜி ரூபாவின் குற்றச்சாட்டை தொடர்ந்து டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பினார்.

இந்த நோட்டீசுக்கு ரூபா விளக்கம் கொடுக்க முயன்றபோது அவருக்கு கடுமையான நெருக்கடிகள் ஏற்பட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பில் இருந்து நெருக்கடிகள் வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதில் தன்னை காப்பாற்றிக் கொள்ள அவர் டி.ஜி.பி.க்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டு விட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே டி.ஐ.ஜி. ரூபாவின் கடித விவகாரம் குறித்தும் சசிகலாவுக்கு சிறையில் வசதி செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சம் பெறப்பட்ட விவகாரம் குறித்தும் மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com