போலி டாக்டர்கள் என்று சித்த மருத்துவர்களை கைது செய்வதா?: ராமதாஸ் கண்டனம்

போலி டாக்டர்கள் என்று சித்த மருத்துவர்களை கைது செய்வதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போலி டாக்டர்கள் என்று சித்த மருத்துவர்களை கைது செய்வதா?: ராமதாஸ் கண்டனம்
Published on

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் போலி மருத்துவர்களை கண்டு பிடித்து கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை வரவேற்கத்தக்கவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், களைகளை அகற்றும்போது பயிர்களும் பிடுங்கப்படுவதைப் போன்று, பாரம்பரிய சித்த மருத்துவர்களும் திட்டமிட்டு பழி வாங்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் போது, பாரம்பரிய சித்த மருத்துவர்களையும் போலி மருத்துவர்களாக சித்தரித்து கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

இதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் கூறும் காரணங்கள் அபத்தக் களஞ்சியங்கள் ஆகும். சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே சித்த மருத்துவர்களாக கருதப்படுவார்கள் என்றும், பட்டம் பெறாத பாரம்பரிய சித்த மருத்துவர்கள் அனைவரும் போலி மருத்துவர்கள் ஆவர் என்றும் விஜயபாஸ்கர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. விட்டால் அகத்தியரைக் கூட போலி மருத்துவர் என்று இவர் முத்திரை குத்துவார்.

ஆங்கில மருத்துவம் என்பது ஆராய்ச்சி வழி வந்தது... சித்த மருத்தும் அனுபவத்தின் வழி வந்ததாகும். சித்தர் வழி வந்தவர்கள் தான் பாரம்பரிய சித்த மருத்துவம் செய்து வருகின்றனர்.

ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது என்று கைவிடப்பட்ட நோய்கள் கூட சித்த மருத்துவத்தில் குணப்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. எழுதப் படிக்காதவர்கள் கூட சித்த மருத்துவத்தில் வல்லுனர்களாக உள்ளனர்.

இவர்கள் மக்களின் நம்பிக்கையை பெற்றவர்களாக உள்ளனர். அதே நேரத்தில் சில சித்த மருத்துவர்கள் குணப்படுத்த முடியாத நோய்களையும் குணப்படுத்துவதாகக் கூறி மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றுகின்றனர்.

நோயால் பாதிக்கப்பட்டு ஏதேனும் அதிசயம் நிகழாதா? என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு தவறான நம்பிக்கையைக் கொடுத்து அவர்களிடம் பணம் பறிப்பது தான் இத்தகைய மருத்துவர்களின் நோக்கம் ஆகும். சில பேராசைப் பிடித்தவர்கள் செய்யும் இத்தகைய மோசடிகளைக் கருத்தில் கொண்டு, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்ட பாரம்பரிய சித்த மருத்துவர்களை போலிகள் என்று முத்திரைக் குத்தக் கூடாது.

டெங்குக் காய்ச்சலை தடுக்கும் சக்தியாக போற்றப்படும் நிலவேம்பு கசாயத்தை தயாரித்தவர்களும், பப்பாளி இலைச்சாறு ரத்தத் தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பதைக் கண்டு பிடித்தவர்களும் சித்தர்கள் தானேயன்றி, சித்த மருத்துவர்கள் அல்ல.

சித்த மருத்துவர்கள் சித்த மருத்துவத்தை படித்து ஏட்டறிவின் அடிப்படையில் வழங்குகின்றனர்; பாரம்பரிய சித்த மருத்துவர்கள் சித்த மருத்துவத்தை பரம்பரை பரம்பரையாக கற்று அந்த அனுபவத்தின் அடிப்படையில் மருத்துவம் செய்கின்றனர்.

இந்த இரு பிரிவினருக்கும் இது தான் வித்தியாசமாகும். பாரம்பரிய சித்த மருத்துவர்களின் வாரிசுகளுக்கு அரசு மற்றும் தனியார் சித்த மருத்துவக் கல்லூரிகளில் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பாரம்பரிய சித்த மருத்துவர்களின் அனுபவம் சேவையைக் கருத்தில் கொண்டு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை போலி மருத்துவர்கள் என விமர்சிப்பது சித்த மருத்துவத்தை அவமதிக்கும் செயலாகும்.

மத்திய அரசால் கடந்த 1970ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய மருத்துவத்திற்கான மத்தியக் கவுன்சில் சட்டத்தின்படி சித்த மருத்துவத்தில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே மருத்துவம் செய்ய வேண்டும் என்பதும் உண்மை தான்.

சித்த மருத்துவம் தமிழ் மருத்துவம் எனும் நிலையில் அதை பாரம்பரியமாக, நேர்மையான முறையில் செய்து வருபவர்களுக்கு தொழில்பாதுகாப்பு வழங்க வேண்டும். சீனாவில் பாரம் பரிய மருத்துவர்கள் அங்கீகரிக்கப்பட்டு கிராமங்களில் மருத்துவம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

விருப்பமுள்ளோருக்கு அடிப்படை ஆங்கில மருத்துவப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு அதையும் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோன்று தமிழகத்திலும் போதிய ஒழுங்குமுறைகளை ஏற்படுத்தி பாரம்பரிய சித்த மருத்துவர்கள் எந்தவித தடையுமின்றி, பாரம்பரிய மருத்துவம் செய்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com