தமிழக அரசியலை மாற்ற ரஜினி, கமல் கூட்டணி?: 6-ந்தேதி மலேசியாவில் ஆலோசனை

தமிழக அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த், கமலஹாசன் மலேசியாவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Rajinikanth
தமிழக அரசியலை மாற்ற ரஜினி, கமல் கூட்டணி?: 6-ந்தேதி மலேசியாவில் ஆலோசனை
Published on

சென்னை:

கருணாநிதி ஓய்வு, ஜெயலலிதா மறைவு காரணமாக தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டதும் அதை பூர்த்தி செய்யப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

தமிழக அரசியல் களத்தில் பல்வேறு தலைவர்கள் இருந்தாலும் அந்த வெற்றிடத்தை நிரப்பப்போவது கமல் ஹாசனா? அல்லது ரஜினியா? என்ற பேச்சு எழுந்தது.

கடந்த ஆண்டு இறுதியில் கமல்ஹாசன் சில அதிரடி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதும் அவருக்கு மக்கள் மத்தியில் சற்று ஆதரவு கிடைத்தது. ஆனால் கட்சி தொடங்கும் வி‌ஷயத்தில் அவர் தாமதம் செய்ததால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் குறைந்து போனது.

இந்த நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் நடிகர் ரஜினி அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளார். கமல்ஹாசன் கட்சி தொடங்குவார் என்று பேசப்பட்ட நிலையில் ரஜினி முந்தி கொண்டதால் அடுத்து கமல்ஹாசன் எத்தகைய அரசியல் பிரவேசத்தை முன்னெடுத்து செல்வார் என்ற கேள்விகுறி எழுந்துள்ளது.

கமல்ஹாசனும், ரஜினியும் திரைத்துறையில் போட்டியாளர்களாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கிடையே நெருக்கமான நட்பு இருக்கிறது. எந்த ஒரு வி‌ஷயத்திலும் அவர்கள் இருவரும் பேசி ஆலோசனை செய்து கொள்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள்.

ரஜினி அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று முடிவு செய்ததும் அவர் முதன் முதலில் அதுபற்றி கமல்ஹாசனிடம் தான் விவாதித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் பொதுவான ஒருநபர் கூறியதாவது:-

கடந்த மாதம் சென்னையில் ரஜினியும், கமல்ஹாசனும் ரகசியமாக சந்தித்து பேசினார்கள். அப்போது இருவரும் தங்களது எதிர்கால அரசியல் பற்றி நீண்ட நேரம் விவாதித்தனர். முதலில் யார் கட்சியை தொடங்குவது என்பது பற்றியும் பேசப்பட்டது.

அப்போது ரஜினி முதலில் நான் அரசியல் கட்சியை தொடங்குகிறேன் என்று கூறினார். அதை கமல்ஹாசன் ஏற்றுக் கொண்டார். அதோடு ரஜினியின் கட்சிக்கு அவர் ஆதரவும் தெரிவித்தார்.

கமல்ஹாசன் தனக்கு விஸ்வரூபம்-2, சபாஷ் நாயுடு என்ற இரண்டு படங்களை முடிக்க வேண்டி இருப்பதால் அரசியலுக்கு வர சற்று அவகாசம் தேவை என்று தெரிவித்துள்ளார். எனவேதான் ரஜினி தற்போது வந்துள்ளார்.

கமல்ஹாசனும், ரஜினியும் அரசியல் ரீதியாக கூட்டணி அமைப்பார்களா? என்று தெரியாது. ஆனால் எந்த ஒரு பெரிய முடிவையும் அவர்கள் இருவரும் கலந்து ஆலோசிக்காமல் எடுத்ததே இல்லை.

அரசியலுக்கும் இது பொருந்தும். எனவே அவர்கள் இருவரும் எம்.ஜி.ஆர்., கருணாநிதி போல மாற வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அந்த பிரமுகர் கூறினார்.

இந்த நிலையில் வருகிற 6-ந்தேதி மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா நடைபெற உள்ளது. அந்த விழாவில் ரஜினி, கமல் இருவரும் பங்கேற்க உள்ளனர்.

ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு பிறகு அவர்கள் இருவரும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பின்போது கமல், ரஜினி இருவரும் தமிழக அரசியல் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

#tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com