Puducherry Assembly Election| புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் கள்ள ஓட்டு போட்ட வாலிபர் கைது

தேர்தல் அதிகாரி பெயர் சீனிவாசன் என அறிவிக்க, பாஜக, காங்கிரஸ், பிற கட்சி பூத் ஏஜெண்டுகள் குறித்துக் கொண்டனர்.
Puducherry Assembly Election| புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதியில் கள்ள ஓட்டு போட்ட வாலிபர் கைது
Published on

புதுச்சேரி:

வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடந்த காலத்தில் அதிகளவில் கள்ள ஓட்டுகள் பதிவானது.

வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் சிலிப்பில் வாக்காளர் படமும் இடம்பெறாது. இதனால் ஆள் மாறாட்டம் செய்த வாக்குகளை பதிவு செய்வது தொடர்கதையாக இருந்தது.

இதன்பிறகு பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை தேர்தல் கமிஷன் கையாள தொடங்கியது. இப்போது வாக்காளர்களின் வண்ண புகைப்படத்துடன் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

உலகில் எங்கும் இல்லாத அளவுக்கு ஓட்டுப்பதிவு எந்திரம் மூலம் தேர்தல் நடக்கிறது. இதனால் கள்ள ஓட்டு, ஆள் மாறாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதிலும் புதுவையில் நடந்த தேர்தலில் ஆள் மாறாட்டம் செய்து வாக்கை பதிவு செய்த சம்பவம் நடந்துள்ளது. புதுவை மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக, காங்கிரஸ் எதிர் எதிராக மோதுகிறது.

இங்கு மண்ணாடிப்பட்டு ஜவகர்லால் நேரு சமுதாய நலக்கூடத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடியில் ஒரு வாலிபர் வாக்கை பதிவு செய்தார்.

அங்கிருந்த தேர்தல் அதிகாரி பெயர் சீனிவாசன் என அறிவிக்க, பாஜக, காங்கிரஸ், பிற கட்சி பூத் ஏஜெண்டுகள் குறித்துக் கொண்டனர். இதில் காங்கிரஸ் ஏஜணெ்ட்டுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நேரத்தில் அவர் வாக்கை பதிவு செய்துவிட்டார். அவர் வாக்கை பதிவு செய்துவிட்டு வந்த போது காங்கிரஸ் ஏஜெண்டு தடுத்து நிறுத்தி அவர் மீது சந்தேகம் இருப்பதாக கூறி போலீசாரிடம் ஒப்படைத்தார்.

போலீசார் விசாரணையில், அவர் புதுவை மாநிலத்தை சேர்ந்தவர் அல்ல என்பதும், மாநில எல்லையை ஒட்டியுள்ள விழுப்புரம் மாவட்டம் தொரவியை சேர்ந்த அரவிந்த் (வயது 31) என்பது தெரியவந்தது.

இவரிடம் ஒரு அரசியல் கட்சியினர் அணுகி, சீனிவாசன் என்பவர் வாக்கு செலுத்த வரமாட்டார். அவர் வயதுடைய அரவிந்த் வாக்கு செலுத்தினால் பணம் தருவதாக கூறியுள்ளனர். இதன்பேரில் அவர் ஆள் மாறாட்டம் செய்து வாக்கு செலுத்தியது தெரிய வந்துள்ளது.

திருக்கனூர் போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com