

புதுவை சட்டசபை தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி பெரும்பான்மை பெற்று முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைந்துள்ளது.
கடந்த 13-ந்தேதி முதல்-அமைச்சராக ரங்கசாமி பொறுப்பேற்றார். அவருடன் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். தொடர்ந்து 20-ந்தேதி எம்எல்ஏக்கள் பதவியேற்றனர்.
இன்னும் சபாநாயகர், துணை சபாநாயகர், 3 அமைச்சர்கள், அரசு கொறடா, முதல்அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் ஆகிய பதவிகள் நிரப்பப்பட வேண்டும். சபாநாயகர் தேர்தல் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறும் என தகவல் வெளியானது.
ஆனால் தேர்தல் முடிந்து 3 வாரம் முடிவடைந்த நிலையில் இதுவரை சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் சபாநாயகர் தேர்தல் அடுத்த மாதத்துக்கு (ஜூன்) தள்ளிப்போகிறது.
கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு சபாநாயகர், 2 அமைச்சர்கள் கடந்த முறையைபோல வழங்குவதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்திருந்தார். ஆனால் தற்போது சபாநாயகர் பதவியை பாஜகவிடம் வழங்க அவருக்கு தயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் துணை சபாநாயகர் பதவியை பா.ஜ.க.வுக்கு ஒதுக்க விரும்புகிறார். இதற்கு பாஜக சம்மதிக்கவில்லை. இதனால் சபாநாயகர் தேர்தல் உடனடியாக நடைபெறாமல் உள்ளது.
அநேகமாக பாஜனதாவின் மேலிட பொறுப்பாளர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து பேசும்போதுதான் இதற்கு ஒரு முடிவு தெரியும்.