

புதுச்சேரி காமராஜ் நகர் எழில் நகரை சேர்ந்த வெங்கடநரசிம்மன்- ஸ்ரீமதி தம்பதியரின் மகள் லட்சுமிபிரபா என்கிற நிவேதிதா.
வீணை கலைஞரான நிவேதிதா தனது 12 வயது முதல் வீணை இசைக்க பயிற்சி பெற்று வந்தார். 500-க்கும் மேற்பட்ட மேடைகளில் கேச்சேரி நடத்தியுள்ளார்.
அரியாங்குப்பத்தில் இயங்கும் புதுச்சேரி அரசின் பாரதியார் பல்கலைக்கூடத்தில் இசை துறையில் பட்டப்படிப்பு இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
இவருக்கும் நாகர்கோவிலை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்கிற விஷாலுக்கும் திருமணம் நடைபெற்றது. தன்னுடைய திருமண மேடை இசை கருவிகளை கொண்டு அமைக்க நிவேதிதா விருப்பப்பட்டார்.
அதற்கேற்ப வீணை, நாதஸ்வரம், வயலின், மிருதங்கம், கடம், தபேலா, நாதஸ்வரம், ஹார்மோனியம், கித்தார் போன்ற இசை கருவிகளை கொண்டு மேடையை அலங்கரிக்க செய்தார். இயற்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் வாழை இலை, வாழை கன்றுகளுக்கு மத்தியில் இசை கருவிகளை வைத்து அலங்கரித்தனர்.
10 பேரை கொண்டு 4 மணி நேரத்தில் இந்த வித்தியாசமான மேடை தயாரானது. இதன் பின்னணியில் திருமண விழா நடைபெற்றது. விழாவிற்கு வந்த உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் இசை மேடை கண்டு வியந்து மணமக்களை வாழ்த்தினனர்.
மேலும், இசை மேடை பின்னணியில் நின்று செல்பி எடுத்தனர்.