

புதுவை சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே, என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க., கூட்டணி அரசு சிவப்பு ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகையை அதிரடியாக ரூ ஆயிரத்தில் இருந்து ரூ 2 ஆயிரம் 500 ஆக உயர்த்தியது.
அதே வேளையில், மஞ்சள் ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் அறிவித்திருந்தார். ஆனால், கடந்த ஆட்சியில் இதனை நடைமுறைப்படுத்த முடியவில்லை.
இதனால் தேர்தலுக்கு பிறகு மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சி பொறுப்பேற்றதும், தனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக திட்டத்திற்கான கோப்பினை முதல்-அமைச்சர் ரங்கசாமி நித்துறைக்கு அனுப்பி வைத்தார்.
நித்துறை அதிகாரிகள் இந்த கோப்பினை பரிசீலித்த பின், போதிய நிதி ஆதாரம் இல்லாததை சுட்டிக்காட்டி மீண்டும் முதல் அமைச்சருக்கே தற்போது திருப்பி அனுப்பியுள்ளனர். மேலும் முதல்- அமைச்சரை நேரில் சந்தித்தும் அதிகாரிகள் நிதி நெருக்கடி குறித்து விளக்கமளித்தனர்.
புதுச்சேரியில் வேறு எந்த அரசு நலத்திட்ட உதவிகளையும் பெறாத, 1 லட்சம் மஞ்சள் ரேஷன் கார்டு குடும்ப தலைவிகள் இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாதம் ரூ 1,000 வீதம் வழங்கினால், மாதத்திற்கு ரூ 10 கோடி என ஆண்டிற்கு ரூ. 120 கோடி கூடுதல் நிதி தேவைப்படுகிறது.
இந்த திட்டத்தை மகளிர் மேம்பாட்டு துறை மூலமாகவே செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே சிவப்பு கார்டுதாரர்களுக்கான தொகை உயர்வு உள்ளிட்ட திட்டங்களால், துறையின் பட்ஜெட் ரூ 220 கோடியாக அதிகரித்துள்ளது.
இப்போது மஞ்சள் கார்டுதாரர்களின் திட்டத்தையும் சேர்த்தால் மகளிர் மேம்பாட்டு துறையின் ஆண்டு செலவு ரூ.340 கோடியாக உயரும். ஆனால், தற்போதைய பட்ஜெட்டில் அவ்வளவு தொகை இல்லை என அதிகாரிகளின் தெரிவித்துள்ளனர்.
ஆகஸ்ட்டு மாதம் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் திட்டத்திற்கு என தனியாக நிதி ஒதுக்கீடு செய்து, அதன்பின் முழுமையாகச் செயல்படுத்தலாம் என்றும் மஞ்சள் கார்டு வைத்திருப்பவர்களில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு மட்டும். ரூ 1000 வழங்கும் திட்டத்தை உடனடியாகத் தொடங்கலாம்.
இதற்கு மாதத்திற்கு ரூ.5 கோடி மட்டுமே செலவாகும் என்பதால், தற்காலிகமாக இந்த மாற்றுப்பாதையைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும் அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
கோப்பு திரும்பிய போதிலும், தகுதி வாய்ந்த அனைத்து மஞ்சள் கார்டு இல்லத்தரசிகளுக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியாக உள்ளார். இதன் காரணமாக, மாற்று திட்டங்கள் மற்றும் நிதி திரட்டும் வழிகள் குறித்து தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் இறுதி ஒப்புதலுக்காக நிதிதுறைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதனால், சட்டசபையில் முழுமையான பட்ஜெட் தாக்கலின் போது திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து மஞ்சள் கார்டு குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படும் என தெரிகிறது.