

புதுவையில் ஏப்ரல் மாதத்தில் கடும் கோடை வெப்பம் நிலவியது.
அதே வெப்ப நிலை மே மாதத்திலும் தொடர்கிறது. ஒரு சில நாட்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது. கடந்த 4ந் தேதி அக்னிநட்சத்திரம் தொடங்கியது. இது புதுவை மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாள் இரவு திடீரென இடியுடன் மழை பெய்தது. இது புதுவை மக்களுக்கு சிறிது ஆறுதலை அளித்தது. அடுத்து வந்த நாட்களில் மீண்டும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் வானிலை மாறியது. கடுமையான இடியுடன் லேசான தூறல் மழை பெய்தது. இது காலை வரை நீடித்தது. இன்று அதிகாலை முதல் கருமேகங்களுடன் வானம் இருண்டு காணப்பட்டது. லேசான மழையும், குளிர்ந்த காற்றும் வீசியது.
அவ்வப்போது மழையின் அளவும் அதிகரித்தது. அக்னி நட்சத்திர காலத்தில் கோடை வெப்பத்தின் தாக்கத்தை தணிக்கும் வகையில் மழை பெய்வது புதுவை மக்களிடையே மகிழ்ச்சியை அளித்துள்ளது. புதுவைக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளுக்கும் திடீரென மாறிய வானிலை உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.