எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும் - பொதுமக்களுக்கு புதுவை அரசு வேண்டுகோள்

பிரதமர் வேண்டுகோளுக்கு இணங்க புதுவை அரசு பல்வேறு எரிபொருள் சிக்கன நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
எரிபொருள் சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டும் - பொதுமக்களுக்கு புதுவை அரசு வேண்டுகோள்
Published on

புதுவை கூடுதல் கலெக்டர் சுதாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சர்வதேச அளவிலான எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, எரிபொருள் சிக்கனத்தை ஊக்குவிக்கும் வகையில், பிரதமர் வேண்டுகோளுக்கு இணங்க புதுவை அரசு பல்வேறு எரிபொருள் சிக்கன நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

கடந்த 20-ந்தேதி புதுவை அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்து செயலர்களுடனும் காணொளி காட்சி கூட்டம் நடத்தப்பட்டது. புதுவை முழுவதும் எரிபொருள் மற்றும் வாகனங்களின் சிக்கனமான மற்றும் சேமிப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த துறைவாரியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

மேலும், எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளின்போது வாகன பேரணிகள், வாகன ஊர்வலங்கள் மற்றும் பெரிய அளவிலான வாகன அணிவகுப்புகளை தவிர்க்க அரசியல் அமைப்புகளும், பொதுமக்களும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும், அலங்கார மின்விளக்குகள், பிளக்ஸ் பேனர்கள் மற்றும் டீசல் ஜெனரேட்டர் பயன்பாடை இயன்றவரை குறைத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அனைத்து அரசியல் அமைப்புகளும் பொதுமக்களும் எளிமையான, ஆடம்பரமற்ற மற்றும் சிறிய அளவிலான கூட்டங்களை நடத்துதல் மற்றும், பொது போக்குவரத்துகளான பேருந்து மற்றும் ரெயில் பயன்பாடை ஊக்குவிப்பதன் மூலம் அரசின் எரிபொருள் சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com