கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு வந்த தங்க நகைகள் பறிமுதல் - தேர்தல் பறக்கும்படை அதிரடி

புதுச்சேரி பெரியகடை போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேரு வீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு வந்த தங்க நகைகள் பறிமுதல் - தேர்தல் பறக்கும்படை அதிரடி
Published on

புதுச்சேரி:

புதுச்சேரியில் சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்க தேர்தல் துறை பறக்கும் படை அதிகாரிகள் மாநில எல்லைகள், முக்கிய சந்திப்புகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கப்பணம் கொண்டு சென்றால் அதற்குரிய ஆவணமும், குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகளை கொண்டு செல்லும்போது அதற்கான ரசீதும் கையில் வைத்திருப்பது அவசியம் என தேர்தல் துறை அறிவித்துள்ளது.

இந்தநிலையில் புதுச்சேரி பெரியகடை போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேரு வீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நெல்லுமண்டி சந்து பகுதியில் பையுடன் நின்ற வடமாநில வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை நடத்தினர். அதில் தங்க செயின், கம்மல், வளையல் உள்ளிட்ட நகைகள் இருந்தன.

இது குறித்து அவரிடம் விசாரித்தபோது சென்னையில் இருந்து தங்க நகைகளை வாங்கி புதுச்சேரி நகைக்கடைகளில் விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளதாகவும் மேலும் நகைக்கடைகளில் மாடல்களை காண்பித்து ஆர்டர் எடுக்க வந்ததாகவும் கூறினார். நகைகளை அவரிடம் கொடுத்து அனுப்பியதற்கான ஆவணமும் இருந்தது. ஆனால் விற்பனை ரசீது இல்லை.

இதையடுத்து போலீசார் அந்த நகைகளை பறிமுதல் செய்தனர். அந்த நகைகள் 2 கிலோவுக்கு மேல் இருந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.2 ¾ கோடியாகும். அந்த நகைகளை போலீசார் ராஜ்பவன் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com