

தமிழகம், புதுவையில் புதிய வரவான விஜய்யின் த.வெ.க.வால் தேர்தல் களம் கணிக்க முடியாததாக மாறியுள்ளது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தமிழகத்தில் திமுக, அதிமுக மற்றும் தவெக ஆகியவை ஆட்சியை பிடிக்கும் என தகவல்கள் வௌியாகியுள்ளது. அதேநேரத்தில் புதுவை தேர்தல் கருத்து கணிப்பில் பெரும்பாலானவை தேசிய ஜனநாயக கூட்டணி 18 முதல் 20 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன.
எதிர்கட்சிகளுக்கு 10 முதல் 12 தொகுதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புதுவை தேர்தல் களத்தில் த.வெ.க. பாதிப்பு எந்த வகையில் இருக்கும் என யாராலும் கணிக்க முடியவில்லை. த.வெ.க. பெரும் வாக்குகளால் வெற்றி பெற சாத்தியம் உள்ளவர்கள் தோல்வியடையவும், தோல்வியடைவோம் என எதிர்பார்ப்பவர்கள் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இதனால் புதுவையில் போட்டியிட்ட பெரும்பாலான வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். யாருமே தாங்கள் வெற்றி பெறுவோம் என உறுதிபட நினைக்கவில்லை. இதனால் குடும்பத்துடன் கோவில், கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதனிடையே நாளை மறுநாள் திங்கட்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. 25 நாள் சஸ்பென்ஸ் முடிவடைய 36 மணி நேரமே உள்ளது. திக், திக் நிமிடங்களில் வேட்பாளர்கள் உறைந்துபோய் கலக்கத்தில் உள்ளனர்.