புதுவையில் நாளை மருந்து கடைகள் இயங்காது: அத்தியாவசிய மருந்துகளை இருப்பு வைக்க அறிவுறுத்தல்

மருந்து ஆய்வாளர்கள் மாநிலம் முழுவதும் அத்தியாவசிய, உயிர் காக்கும் மருந்துகள் கிடைப்பதை கண்காணிக்கவும், தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
புதுவையில் நாளை மருந்து கடைகள் இயங்காது: அத்தியாவசிய மருந்துகளை இருப்பு வைக்க அறிவுறுத்தல்
Published on

சட்டவிரோத ஆன்லைன் மருந்து விற்பனையை தடுக்க வேண்டும். மருந்துகள் அநியாய தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும். மருந்து வணிகர்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை புதன்கிழமை நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தை மருந்து வணிகர்கள் நடத்துகின்றனர். புதுவையை சேர்ந்த மருந்தகங்கள் இயங்காது என மாநில மருந்து வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் புதுவை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அனந்த கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்கள் அத்தியாவசிய மருந்து பொருட்களை முன்கூட்டியே போதிய அளவு வாங்கி கையிருப்பில் வைக்க வேண்டும்.

அவசரகால மருந்துகள், இன்சுலின், இன்ஹேலர், உயிர் காக்கும் மருந்துகள், குழந்தைகள் நல மருந்துகளை முன்கூட்டியே வாங்கி வைக்க வேண்டும். மருந்து ஆய்வாளர்கள் மாநிலம் முழுவதும் அத்தியாவசிய, உயிர் காக்கும் மருந்துகள் கிடைப்பதை கண்காணிக்கவும், தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

புதுவை மாநில மருந்து வணிகர் சங்க செயலாளர் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதுவை மாநிலத்தில் ஆயிரத்து 500 மருந்து வணிகர்கள் செயல்பட்டு வருகின்றனர். புதுவை மாநில மருந்து வணிகர்கள் சங்கத்தில் 480 உறுப்பினர்கள் மட்டுமே கடை அடைப்பில் பங்கேற்கின்றனர். மற்ற மருந்து வணிகர்கள் கடை அடைப்பில் கலந்து கொள்ளவில்லை.

மருத்துவ கல்லூரிகள், தனியார் கிளினிக்குகளில் உள்ள மருந்தகங்கள் வழக்கம்போல செயல்படும். அவசர மருந்து தேவைக்கு வணிகர்களை தொடர்பு கொண்டால், மருந்துகள் உடனடியாக வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com