

புதுவை அமைச்சரவையில் முதல்-அமைச்சருடன் சேர்த்து 6 அமைச்சர்கள் மட்டுமே இடம்பெறுவர்.
2021 சட்டமன்ற தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை பிடித்தது. அப்போது துணை முதல்-அமைச்சர் பதவியை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு அடுத்தபடியாக நமச்சிவாயத்துக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்க பா.ஜ.க. முயற்சிகளை எடுத்தது. ஆனால், முதல்-அமைச்சர் ரங்கசாமி, இதற்கு உடன்படவில்லை.
இதனால் நமச்சிவாயம் 2வது அமைச்சராக அமைச்சரவையில் இடம்பெற்றார். இந்த நிலையில் கடந்த 9ம்தேதி புதுவை சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்து முடிந்துள்ளது. தற்போது மீண்டும் துணை முதல்-அமைச்சர் பதவியை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வௌியாகியுள்ளது.
இதற்காக உள்துறை அமைச்சகத்துக்கு அனுமதி கேட்டு கவர்னர் மாளிகையிலிருந்து கோப்பு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த முறை என்ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்ற பிறகு துணை முதல்-அமைச்சர் பதவியை உருவாக்க முயற்சிகள் நடந்தது. இந்த முறை தேர்தல் முடிந்தவுடனேயே துணை முதல்-அமைச்சர் பதவிக்கான வேலைகள் தொடங்கியுள்ளது.
இருப்பினும் அமைச்சர்களை நியமிப்பது முதல்-அமைச்சரின் விருப்பம். இதனால் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் முதல்-அமைச்சர் கையில்தான் துணை முதல்-அமைச்சர் நியமனம் இருக்கும்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பொறுத்தவரை துணை முதல்-அமைச்சர் என்ற பதவியே கிடையாது. ஆனால் மாநிலங்கள் தங்கள் வசதிக்காக அமைச்சரவையில் துணை முதல்-அமைச்சர் என்ற பொறுப்பை வழங்குகின்றன. அவர்களும் சட்டப்படி அமைச்சர்களாகத்தான் கருதப்படுவர்.