புதுச்சேரி சட்டசபையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு- தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்

சட்டமன்ற செயலாளர் தயாளன் கவர்னர் கைலாஷ்நாதன் தற்காலிக சபாநாயகராக அன்பழகனை நியமித்த உத்தரவை வாசித்தார். பின்னர் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் உறுப்பினர்கள் பதவி ஏற்கும் நடைமுறைகளை கூறினார்.
புதுச்சேரி சட்டசபையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு- தற்காலிக சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்
Published on

புதுவை சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி அறிவிக்கப்பட்டது.

தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக 1, லஜக 1 தொகுதியில் வெற்றி பெற்றது. திமுக 5, காங்கிரஸ் 1, தவெக கூட்டணி 3, சுயேச்சை 3 தொகுதிகளில் வெற்றி பெற்றனர்.

கடந்த 13-ந் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல்-அமைச்சராக ரங்கசாமி பொறுப்பேற்றார். அவருடன் பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம், என்ஆர்.காங்கிரசை சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி என 2 தொகுதியில் போட்டியிட்டு ரங்கசாமி வெற்றி பெற்றிருந்தார். இதில் தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ரங்கசாமி கடந்த 17-ந்தேதி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை சட்டமன்ற செயலகம் ஏற்று தட்டாஞ்சாவடி தொகுதியை காலியிடமாக அறிவித்தது.

இதனிடையே தற்காலிக சபாநாயகராக அன்பழகன் நியமிக்கப்பட்டார். கடந்த 18-ந்தேதி தற்காலிக சபாநாயகர் அன்பழகனுக்கு, கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி உட்பட 28 எம்எல்ஏக்கள் பதவியேற்க சட்டசபை இன்று கூடியது. காலை 9.37 மணிக்கு சபையை தற்காலிக சபாநாயகர் அன்பழகன் குரலை வாசித்து தொடங்கி உரையாற்றினார்.

தொடர்ந்து சட்டமன்ற செயலாளர் தயாளன் கவர்னர் கைலாஷ்நாதன் தற்காலிக சபாநாயகராக அன்பழகனை நியமித்த உத்தரவை வாசித்தார். பின்னர் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் உறுப்பினர்கள் பதவி ஏற்கும் நடைமுறைகளை கூறினார்.

இதனையடுத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் சிவகொழுந்து, ராஜவேலு, நாஜிம், திருமுருகன், ஜான்குமார், நேரு, ஆறுமுகம், கார்த்திகேயன், செந்தில்குமார், வையாபுரி மணிகண்டன், ராஜசேகர், மீனாட்சி சுந்தரம், அசோக்குமார், அழகானந்தம், கார்த்திகேயன், ஜோஸ் சார்லஸ் மார்டின், மீனாட்சி சுந்தரம், மோகன்தாஸ், டாக்டர் நாராயணசாமி, ராமு, ரவிக்குமார், செந்தில் கவுண்டர், விக்னேஷ் கண்ணன், டாக்டர் விக்னேஷ்வரன் ஆகியோர் வரிசைப்படி உறுதிமொழியை வாசித்து பதவி ஏற்றனர். எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

உறுதிமொழியில் இல்லாத வாசகத்தை படித்த நேரு

புதுவை சட்டமன்றத்தில் புதிதாக தேர்வான எம்எல்ஏக்கள் உறுதிமொழியை வாசித்து பதவி ஏற்றனர். அப்போது நேரு எம்எல்ஏ உறுதி மொழியை வாசித்த போது அதில் இல்லாத ஒரு வரியை குறிப்பிட்டு பேசினார். இதனை தற்காலிக சபாநாயகர் அன்பழகன் சபை குறிப்பில் இருந்து நீக்கினார்.

தவெக எம்எம்ஏ சாய் சரவணகுமார் ஆப்செண்டு

புதுவை சட்டமன்றத்தில் இன்று நடந்த எம்எல்ஏ பதவி ஏற்பு விழாவில் திருபுவனை தொகுதி எம்எல்ஏ சாய். சரவணகுமார் பங்கேற்கவில்லை. அவர் மற்றொரு நாளில் சபாநாயகர் அறையில் பதவி எற்பார்.

சட்டமன்ற கேலரியில் எம்எல்ஏக்கள் குடும்பத்தினர்

புதுவை சட்டமன்ற கேலரியில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பை காண அவர்களது குடும்பத்தினர் வந்திருந்தனர். கேலரி அறை சிறியது என்பதால் குடும்பத்தினர் அனைவரும் ஒரே நேரத்தில் உட்கார முடியாது. இதனால் அந்தந்த எம்எல்ஏக்கள் பதவி ஏற்கும் போது அவர்களது குடும்பத்தினர் வந்து அமர்ந்து பார்த்தனர். இதனால் கேலரியில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தலையிட்டு சபை காவலர்களை அமைதிபடுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com