

புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சபாநாயகர், எதிர்கட்சித்தலைவர், துணை சபாநாயகர் மற்றும் எம்எல்ஏக்களுக்கு அலுவலகங்கள் உள்ளது.
சட்டசபை அலுவலகங்களில் தொகுதி மக்கள் அமைச்சர்கள், எம்எல்ஏக்களை பார்த்து குறைகளை நிவர்த்தி செய்வர். இதனால் சட்டசபை வளாகம் அலுவலக நேரங்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். கடந்த மார்ச் 15-ந்தேதி சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அன்றைய தினமே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தங்கள் அலுவலகங்களை பூட்டிவிட்டு தேர்தல் பணிக்கு சென்று விட்டனர். கார்களை அரசு செயலரிடம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்தது. வரும் மே 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கைக்கு 9 நாட்களே உள்ள நிலையில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அலுவலகங்களை காலி செய்து வருகின்றனர்.
அலுவலகத்தில் பயன்படுத்திய பொருட்கள், ஆவணங்களை வேன்கள் மூலம் ஏற்றி செல்கின்றனர். தேர்தல் முடிவுக்கு பிறகு யார் எம்எல்ஏ, யார் அமைச்சர்? என தெரியவரும். அதன்பிறகு அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு அலுவலகம் ஒதுக்கப்படும்.
இதனால் தற்போதைய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அலுவலகங்களை காலி செய்து வருகின்றனர்.