வணிக சிலிண்டர் தட்டுப்பாடால் புதுவையில் எகிறும் உணவு விலை

போர் நின்றால், உயர்த்தப்பட்ட உணவுகளின் விலையை மீண்டும் பழைய நிலைக்கு ஓட்டல் உரிமையாளர்கள் குறைப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
வணிக சிலிண்டர் தட்டுப்பாடால் புதுவையில் எகிறும் உணவு விலை
Published on

அமெரிக்கா, ஈரான் போரால் உலகம் முழுவதும் பெட்ரோலிய பொருட்கள், கியாஸ் தட்டுப்பாடு நிலவுகிறது.

நாடு முழுவதும் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடை சமாளிக்க மத்திய அரசு வணிக சிலிண்டர்கள் தாராளமாக வழங்குவதை நிறுத்தியுள்ளனர். அதோடு வணிக சிலிண்டர்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் புதுவையில் பல சிறிய ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளது.

இருப்பினும் இயங்கும் ஓட்டல்களிலும் உணவுகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண ஓட்டல்களில் ரூ.30க்கு விற்ற பூரி, பொங்கல் ஆகியவை ரூ.40க்கும், இட்லி, வடை ரூ.6ல் இருந்து ரூ.10க்கும், பரோட்டா ரூ.15ல் இருந்து ரூ.20, ரூ.25 வரையிலும், பிரியாணி சராசரியாக ரூ.100, சாப்பாடு ரூ.150 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

பெரிய ஓட்டல்களில் குறிப்பிட்ட உணவுகள் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கின்றனர். முதலிலேயே முழுமையாக ஆர்டர் கொடுக்க வேண்டும். கியாஸ் அடிக்கடி உபயோகப்படுத்த முடியாது என்பதால் ஒரே கட்டமாக சமைத்து எடுத்து வருவோம் என தெரிவிக்கின்றனர். சில ஓட்டல்களில் புதிய விலை உயர்வுடன் மெனு கார்டு தயாரித்துள்ளனர்.

அடுப்பு எரிந்து கொண்டே இருக்கும்போது தயாரிக்கும் உணவுகளான தோசை வகைகள், கிரில்டு உணவுகள் கிடையாது என தெரிவிக்கின்றனர். சிறிய ஓட்டல்கள் வைத்திருப்பவர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே விறகு அடுப்புகளில் உணவை தயாரித்து ஓட்டல்களுக்கு எடுத்து வந்து வியாபாரம் செய்கின்றனர்.

இதனால் விறகு விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. விறகு அடுப்பு அமைக்க இடம் இல்லாதவர்கள் காலி மனைகளை வாடகைக்கு எடுத்து அங்கு விறகு அடுப்பில்உணவு தயாரித்து ஓட்டல்களுக்கு கொண்டு வருகின்றனர்.

தென்னிந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இதனால் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வார இறுதிநாளான கடந்த வெள்ளிக்கிழமை முதல் நகரின் ஒயிட் டவுன் பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இவர்கள் ஓட்டல்களில் உணவு இல்லாமல் சாலையோர உணவகங்களை நாடியுள்ளனர். புதுவையில் காபி, டீ கடைகளில் காலை, மாலையில் கூட்டம் நிரம்பி வழியும். இங்கு கியாஸ் உபயோகம் அதிகமாக தேவைப்படும். இதனால் டீ, காபி விலையையும் அவ்வப்போது உயர்த்தி வந்தனர். தற்போது டீ ரூ.20, காபி ரூ.30 என உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த எகிறும் விலை உயர்வு புதுவை மக்கள், சுற்றுலா பயணிகளுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. போரை நிறுத்த அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. போர் நின்றால், உயர்த்தப்பட்ட உணவுகளின் விலையை மீண்டும் பழைய நிலைக்கு ஓட்டல் உரிமையாளர்கள் குறைப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com