

மீன்களின் இனப்பெருக்க காலத்தையொட்டி கடல் வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கத்துக்காக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீன் பிடிக்க மத்திய அரசு ஆண்டு தோறும் தடை விதித்து வருகிறது.
ஏனெனில் அந்த கால கட்டத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலம் என்பதால் மீன்வள பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மீன் பிடி தடைக்காலம் வருகிற 15-ந்தேதி அமலுக்கு வருகிறது. கிழக்கு கடல் பகுதியில் புதுச்சேரியில் கனகசெட்டிக்குளம் மீனவ கிராமம் முதல் மூர்த்திக்குப்பம் கிராமம் வரையிலும், காரைக்கால் கடல் பகுதியில் மண்டபத்தூர் மீனவ கிராமம் முதல் வடக்கு வாஞ்சூர் மீனவ கிராமம் வரையிலும் வருகிற 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 15-ந் தேதி 61 நாட்கள் தடை விதிக்கப்படவுள்ளது.
புதுச்சேரியில் 18 மீனவ கிராமங்களில் 360 விசை படகுகளும், ஆழ்கடலுக்கு செல்லும் 50 பெரிய விசைப் படகுகளும், மீன் பிடி தொழிலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தடைக்காலத்துக்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் ஆழ் கடலில் மீன்பிடிக்க செல்பவர்கள் படிப்படியாக கரை திரும்பி வருகின்றனர். மீன்பிடி தடைக்காலத்திலும் படகுகள் சீரமைப்பு மராமத்து பணிகளை மேற்கொள்ளவும் திட்ட மிட்டுள்ளனர். வலைகளை சீரமைப்பது படகுகளுக்கு வண்ணம் தீட்டுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் தயாராகி வருகின்றனர்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் தடைக்காலங்களில் மீன் பிடிக்க கண்டிப்பாக செல்ல கூடாது. முன்னதாக விசை படகுகள், இழுவை படகுகள் என அனைத்தும் வருகிற 14-ந் தேதி இரவு 12 மணிக்குள் கட்டாயம் கரைக்கு திரும்ப வேண்டும் எனவும், இதனை கடைபிடிக்காமல் தடையை மீறினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வருகிற 15-ந் தேதி முதல் ஆழ்கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் இன்று மீன் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.