

சாலை விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்கு அப்பால் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் இயங்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை-332 (பழைய எண் NH-45A)ஒட்டி, தடைசெய்யப்பட்ட தூரத்துக்குள் மதுபானக்கடைகள், பார்கள், சாராய கடைகள் இயக்கி வருகின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.
இதனையடுத்து அந்த மதுபான கடைகளை அகற்ற 30 நாட்கள் கெடு விதித்து புதுவை கலால்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்ட அமலாக்கப் பிரிவு, புதுவையில் புதிதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை 332 ஐ ஒட்டி அமைந்துள்ள மதுபான கடைகள், பார்கள் பொதுமக்களுக்கும், சாலை பயனாளிகளுக்கும் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துகிறது.
இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்கள், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, புதிதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள மதுபானக் கடைகளை மூடுவதற்கும், அதனை இடமாற்றம் செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட தூரத்திற்குள் அமைந்துள்ளதால், தேசிய நெடுஞ்சாலை-332 ஐ ஒட்டி, சோரியாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள உரிமம் பெற்ற 9 மதுக்கடைகள், பார்கள் மற்றும் சாராயக்கடைகளை 30 நாட்களுக்குள் அகற்றி, தேசிய நெடுங்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இடமாற்றம் செய்ய வேண்டும்.
அவ்வாறு இடமாற்றம் செய்யவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.