

புதுவை திருபுவனை தொகுதி தவெக எம்எல்ஏ சாய்சரவணக்குமார் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் சந்தித்து பேசினார்.
அப்போது தமிழகத்தில் பள்ளி திறக்கப்பட்ட நாளில் புத்தகம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் புதுவையில் புத்தகம் வழங்கவில்லை என குற்றம்சாட்டினார். அப்போது நடந்த உரையாடல் வருமாறு:-
முதல்-அமைச்சர்: புதுவை வேற, மற்ற மாநிலங்கள் வேற. அமைச்சராக எத்தனை ஆண்டு இருந்தீர்கள்? புதுவை நிலைமை உங்களுக்கு தெரியாதா? கவர்னருக்கு கோப்பு அனுப்பினா, அங்க, இங்கன்னு சுத்தலில் விட்டு கடைசியில எங்க நிக்கனுமோ, அங்க நிற்கிறது. கடைசியில குறி போட்டு எனக்கே திரும்பி வருகிறது.
எம்எல்ஏ: நீங்க சாட்டையை சுழற்றினால் எல்லாம் நடக்கும்.
முதல்-அமைச்சர்: நீங்க அமைச்சராத்தானே இருந்தீங்க, மாநில அந்தஸ்து வாங்கி கொடுத்துருக்கலாமே, சாட்டையை சுழற்றியிருக்கலாமே.
எம்எல்ஏ: நீங்க பேசினாத்தான் நடக்கும். தட்டினால்தான் கதவு திறக்கும். தட்டாமல் எப்படி திறக்கும். 4 ஆயிரம் சதுர கிமீ பரப்பளவு உள்ள கடலூரில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள்தான் உள்ளனர். ஆனால் 492 சதுர கிமீ உள்ள புதுவையில் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் இருந்தும் வேலை செய்வதில்லை. நமக்கு எதற்கு அந்த அதிகாரிகள்?
முதல்-அமைச்சர்: ஐஏஎஸ் அதிகாரிகள் என்ஜாய் பண்ண, ஜாலியாக இருக்க இங்கு வருகிறார்கள்.
எம்எல்ஏ: என்ஜாய் பண்ண வர்றாங்கன்னா, ரிப்போர்ட் எழுதி உடனே அனுப்புங்க, வேலை இல்லாம போகட்டும், தண்டனை கொடுக்க வேண்டியவர்களை தண்டித்துத்தான் ஆக வேண்டும். அதையெல்லாம் மன்னிக்க முடியாது.
முதல்-அமைச்சர்: மாநிலங்கள் நிலை வேறு, இங்கு வந்து கோப்புகளை அனுப்பினால் 48 குறி போட்டு திருப்பி அனுப்புகிறார்கள்.
எம்எல்ஏ: அந்த அதிகாரிகளை அழைத்து அப்படியே கையெழுத்து போட செல்லுங்கள்.
முதல்-அமைச்சர்: நடக்கிற வேலையும் கெட்டுவிடும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
புதுவை முதல்-அமைச்சராக ரங்கசாமி கடந்த 2021ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை ஏற்கனவே பதவி வகித்துள்ளார். அந்த காலத்திலும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் மோதல் போக்கை கடைபிடித்தார்.
அரசு விழாக்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் கோப்புகளை திருப்பி அனுப்புகின்றனர், பல கேள்விகள் கேட்கின்றனர், அனுமதி அளிப்பதில்லை என பல முறை குறைபட்டுள்ளார். கடந்த ஆட்சிக்கால கட்டத்தில் பல முறை இது தொடர் நிகழ்வாகவே நடந்து வந்துள்ளது.
ஒரு கட்டத்தில் தலைமை செயலரையும் புகார் செய்துள்ளார். அதோடு, புதுவைக்கு வரும் மத்திய மந்திரிகளிடமும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது புகாரும் செய்துள்ளார். தற்போது 2026ல் மீண்டும் ரங்கசாமி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
இப்போதும் அதேபோல ஐஏஎஸ் அதிகாரிகளுடன் மோதல் போக்கை ரங்கசாமி தொடர்கிறார். வழக்கம்போல இதற்கெல்லாம் மாநில அந்தஸ்து மட்டுமே தீர்வு என்றும் ரங்கசாமி பலமுறை கூறியுள்ளார்.