

புதுவை கலெக்டர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுவை அரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மூலம் கடந்த 25ந் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில், வரவிருக்கும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு செயல்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க பொதுமக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும். இந்த தரவுகள் தேசிய திட்டமிடல், கொள்கை வடிவமைப்பு மற்றும் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கான தொகுதி வரையறை மற்றும் ஒதுக்கீடு போன்ற செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றுகின்றன.
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 இன் முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு புதுவை யூனியன் பிரதேசத்தில் அட்டவணைப்படி நடைபெறும். பொதுமக்கள் தாங்களே se.census.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தகவல்களை பதிவுசெய்யும் சுய கணக்கெடுப்பு வரும் மே 17-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறும்.
கணக்கெடுப்பு அலுவலர்கள் வீடுதோறும் சென்று தகவல்களை சேகரிக்கும் பணி ஜூன் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை மேற்கொள்ளப்படும். இந்த கணக்கெடுப்பின்போது வீட்டு அமைப்பு, குடிநீர் வசதி, கழிப்பறை, சமையல் எரிபொருள், மின்சாரம் மற்றும் இணைய வசதி உள்ளிட்ட மொத்தம் 33 விவரங்கள் சேகரிக்கப்படும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948ன் படி, பொதுமக்கள் சில முக்கிய சட்டப்பூர்வ கடமைகளை கடைபிடிக்க வேண்டும். கணக்கெடுப்பு அலுவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான மற்றும் துல்லியமான பதில்களை வழங்குவது கட்டாயமாகும். வீடுகளில் கணக்கெடுப்பு அலுவலர்கள் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.
தேவையானபோது, கணக்கெடுப்பு படிவங்களை சரியாக நிரப்பி ஒப்படைக்க வேண்டும். கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும் முழுமையான ரகசியத்துடன் பாதுகாக்கப்படும். வழக்குகளிலும் இந்த தகவல்கள் சான்றாக பயன்படுத்தப்படமாட்டாது என்பதும் உறுதியாக அறிவிக்கப்படுகிறது.
கணக்கெடுப்பு பணிகளில் ஒத்துழைக்காமல் இருப்பது, தவறான தகவல் வழங்குவது, அல்லது அலுவலர்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற செயல்கள் சட்டப்படி குற்றமாகும். இத்தகைய விதி மீறல்களுக்கு ரூ.1000ம் வரை அபராதம் விதிக்கப்படும்.
எனவே, அனைத்து பொதுமக்களும் இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணியில் ஆர்வத்துடன் பங்கேற்று, துல்லியமான தகவல்களை பணிகள் வெற்றிகரமாக ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.