

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சந்தர் (வயது31). மீனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலைக்காக வெளிநாட்டிற்கு சென்ற சந்தர் கடந்த 17-ந்தேதி விடுமுறையில் வீட்டிற்கு வந்தார்.
மறுநாள் தான் காதலித்த பெண்ணை சந்தித்து திருமணம் குறித்து பேசினார். அதற்கு அந்த பெண் மறுத்து விட்டார். மேலும் அந்த பெண் தொடர்ந்து சந்தரிடம் பேசவும் மறுத்து விட்டார். அதில் மனமுடைந்த சந்தர் வீட்டில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த சந்தர் நேற்று மாலை தனது அறையில் தூக்குப்போட்டு தொங்கினார்.
அவரது குடும்பத்தினர் சந்தரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சந்தர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நெடுங்காடு மேலக்கோட்டுச் சேரியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(24). மீன் பிடி துறைமுகத்தில் சுமை தூக்கும் வேலை செய்து வந்தார். இவர் பூவம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் காதலர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சந்தோஷ் குமாரிடம் அந்த பெண் திடீரென பேச மறுத்து விட்டார்.
இதனால் மனமுடைந்த சந்தோஷ்குமார் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து நெடுங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.