தமிழகத்தை கலவர பூமியாக்கி பா.ஜனதா ஆதாயம் தேட முயற்சிக்கிறது- பி.ஆர்.பாண்டியன்

அமைதியான தமிழகத்தை கலவர பூமியாக மாற்றி அரசியல் ஆதாயம் தேட பா.ஜனதா முயற்சிக்கிறது என்று பி.ஆர். பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தை கலவர பூமியாக்கி பா.ஜனதா ஆதாயம் தேட முயற்சிக்கிறது- பி.ஆர்.பாண்டியன்
Published on

மன்னார்குடி:

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். தற்போது கன்னியாகுமரி முதல் சென்னை கோட்டை வரை நடைபயணம் மேற்கொண்டுள்ள அவர், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் பிரசாரம் செய்து வருகிறார். அவருடைய கோரிக்கைகளின் நியாயத்தை உணர்ந்து நிறைவேற்ற வேண்டிய பிரதமர் மோடி, கோரிக்கைகளை நிறைவேற்றாமல் பா.ஜனதா கட்சி தலைவர்கள் மூலம் அவதூறு பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த அய்யாக்கண்ணுவை, தூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா மகளிரணி பொதுச் செயலாளர் நெல்லையம்மாள் தாக்கியது கண்டிக்கத்தக்கது. இது ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளை அவமானப்படுத்தும் செயல் ஆகும். இந்த சம்பவம், விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நாட்டை ஆளும் கட்சிக்கு இல்லை என்பதை காட்டுகிறது.

அமைதியான தமிழகத்தை கலவர பூமியாக மாற்றி அரசியல் ஆதாயம் தேட பா.ஜனதா முயற்சிப்பது கீழ்த்தரமானது. அய்யாக்கண்ணுவை தாக்கிய நெல்லையம்மாளை கைது செய்ய, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழகத்தில் போராட்டம் நடத்துபவர்கள் மீது போலீசாரை கொண்டு தாக்குதல் நடத்துவதை தமிழக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லை எனில் விவசாயிகள் ஒன்றிணைந்து எதிர் தாக்குதலில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com