தமிழகத்தில் சில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் இன்று சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சில இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

சென்னை:

தமிழகத்தில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது. வறட்சியால் நீர் நிலைகளும் வறண்டுபோய் கிடக்கின்றன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அதே சமயத்தில் கன்னியாகுமரி, தேனி, நெல்லை, ஊட்டி உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் தென் மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளது. தென்னிந்தியாவின் தெற்கு பகுதியில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு, மேற்காக காற்றின் திசைவேகம் மாறும் பகுதி நிலவுகிறது. மேற்கு கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவும் நிலையில், சனிக்கிழமை (இன்று) கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கக்கூடும்.

வெப்பச்சலனம் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் (இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இயல்பை விடவும் அதிகரிக்கும்.

தென் மேற்கு பருவமழை தொடங்கிய பின்னர், தமிழகத்தில் படிப்படியாகத்தான் வெப்பத்தின் தாக்கம் குறைய ஆரம்பிக்கும். சென்னையில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தெற்கு தீபகற்ப இந்திய பகுதிகளில் இந்த ஆண்டு பருவமழைக் காலத்தில் 64 செ.மீ. முதல் 76 செ.மீ. மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.நேற்று காலை 8.30 மணியோடு நிறைவடைந்த கடந்த 24 மணி நேர நிலவரப்படி கன்னியாகுமரி மாவட்டம் சூரளக்கோடு மற்றும் சிவலோகத்தில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com