கிழக்கு கடற்கரை சாலைக்கு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்ட திட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரை சாலைக்கு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்ட திட்டமிட்டுள்ளதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கிழக்கு கடற்கரை சாலைக்கு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்ட திட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன்
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் இன்று நடந்த இரட்டை ரெயில் மின்பாதைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் பேசியதாவது:-

குமரி மாவட்ட மக்களின் 40 ஆண்டுகால கனவு இன்று நனவாகி உள்ளது. நாகர்கோவிலில் இருந்து மதுரை- வாஞ்சிமணியாட்சி- தூத்துக்குடி, வாஞ்சிமணியாட்சி- நெல்லை- நாகர்கோவில்- திருவனந்தபுரம் இடையிலான ரெயில் பாதையை மின்மயமாக்குவதோடு, இரட்டை ரெயில் பாதை அமைக்க ஏற்கனவே திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த மாதமே நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஒக்கி புயல் காரணமாக விழா தள்ளி வைக்கப்பட்டு இப்போது நடக்கிறது.

இத்திட்டத்திற்கான மொத்த நிதி ரூ.4 ஆயிரம் கோடியையும் மத்திய அரசே கொடுக்கிறது. பொதுவாக மத்திய அரசு நிறைவேற்றும் திட்டங்களில் 50 சதவீதம் நிதியை அந்தந்த மாநில அரசுகள் வழங்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் தற்போது நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இரட்டை ரெயில் பாதை திட்டத்திற்கான மொத்த நிதியையும் மத்தியஅரசே அனுமதிக்க வேண்டும் என்று நான் இதற்கு முன்பு ரெயில்வே மந்திரியாக இருந்த சுரேஷ்பிரபுவிடம் கோரிக்கை வைத்தேன்.

அவர் இதனை பிரதமரின் கவனத்திற்கு கொண்டுச் சென்று மொத்த நிதியையும் பெற்றுத்தந்தார். எனவே தான் இத்திட்டத்திற்கான மொத்த நிதியும் மத்திய அரசு நிதி என்று கூறினேன்.

இத்திட்டம் நிறைவேறும் போது குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களும் மேம்படும். நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். நாகர்கோவில் டவுண் ரெயில் நிலையமும் மேம்படுத்தப்படும். ரெயில் நிலைய அடிப்படை வசதிகளை மேம்படுத்த எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.40 லட்சம் வழங்கி உள்ளேன். இது போல மற்ற எம்.பி.க்களும் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி அளிக்கலாம்.

குமரி மாவட்ட வளர்ச்சி திட்டங்களுக்கு நாம் அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டும். இந்த மேடை அரசியல் மேடை அல்ல. பொது மேடை. இதில் அனைத்து கட்சி பிரமுகர்களும் உள்ளனர். அவர்கள் குமரி மாவட்ட வளர்ச்சி பணிகளுக்கு கரம்கோர்க்க வேண்டும்.

இங்கு ஏற்படுத்தப்படும் வளர்ச்சிப்பணிகளை அணைப்போட்டு தடுக்க பலர் முயற்சி செய்கிறார்கள். அதனை நாம் தான் இணைந்து முறியடித்து மாவட்டத்தை வளர்ச்சிப்பாதை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டும்.

சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரை சாலை மற்றும் கிழக்கு கடற்கரை ரெயில் தடம் அமைக்க 2008-2009-ம் ஆண்டில் ஆய்வுகள் நடந்தது. அதன்பின்பு இப்பணி கிடப்பில் போடப்பட்டது. இப்போது மீண்டும் அந்த பணியை தொடங்கி நிறைவேற்ற நான் முயற்சி மேற்கொண்டு உள்ளேன்.

ஆய்வு பணிகள் முடிவடைந்து இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் அடிக்கல் நாட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இது போல கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு படகு சேவை நடத்தவும் ஆய்வு நடக்கிறது. இப்பணி முடிந்து படகு சேவை தொடங்கும் போது குமரி மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும். விரைவில் விமான நிலையமும் அமைய உள்ளது.

இதன் மூலம் குமரி மாவட்ட வணிகர்களும், தொழில் நிறுவனர்களும் பலன்அடைவார்கள்.

கேரளாவில் வளர்ச்சி பணிகளை நிறைவேற்ற அங்குள்ள அரசியல் கட்சியினர் ஒன்றிணைந்து குரல் கொடுக்கிறார்கள். அது போல நாமும் நமது மாவட்ட வளர்ச்சிக்கு இணைந்து குரல் கொடுப்போம்.

நாகர்கோவிலை மையமாக வைத்து தனி ரெயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் என்று இங்கு வந்துள்ள ரெயில்வே இணை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். இதற்காக ஒரு மணி நேரம் பேசியுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com