போலீஸ் பாதுகாப்புடன் வலம் வந்த தொழில் அதிபரை வெட்டி கொல்ல முயன்ற கும்பல்

வேலூரில் ஜி.ஜி.ரவி தம்பியை ரவுடி குப்பன் கும்பல் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் பாதுகாப்புடன் வலம் வந்த தொழில் அதிபரை வெட்டி கொல்ல முயன்ற கும்பல்
Published on

வேலூர்:

வேலூர் காந்தி ரோடு பகுதியில் வசிப்பவர் செல்வம் (வயது47). தொழிலதிபரான இவர் முன்னாள் அ.தி.மு.க. பிரமுகரான ஜி.ஜி.ரவி தம்பி ஆவார்.

பைனான்ஸ், டிராவல்ஸ், வீட்டு மனைகள் விற்பனை செய்வது உள்பட பல்வேறு தொழில்களை கவனித்து வருகிறார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காட்பாடி ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபம் எதிரே ரவுடி குப்பன் கும்பலால் ஜி.ஜி.ரவி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய தம்பி ரமேஷ் ஆற்காடு ரோட்டில் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

தொடர்ந்து குடும்பத்தினர் மர்ம கும்பலால் கொலை செய்யப்படுவதால் கடந்த சில மாதங்களாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் செல்வம் வலம் வந்து கொண்டிருந்தார். அவர் எங்கு சென்றாலும் போலீஸ் உடன் சென்று வருவார்.

செல்வத்துக்கு தோட்டப் பாளையம் டி.கே.வி. பகுதியில் உள்ள லாட்ஜ் அருகே சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன் தலைமையிலான அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.

அந்த இடம் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதையடுத்து அந்த இடத்தை ஆட்களை வைத்து சுத்தம் செய்யும் பணியில் செல்வம் நேற்று மாலை ஈடுபட்டார். அவருடன் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய போலீஸ் இருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 6 பேர் கும்பல் வீச்சரிவாளால் செல்வத்தை வெட்ட ஓடி வந்தனர்.

இதனை கவனித்த துப்பாக்கி வைத்திருந்த போலீசார் அந்த கும்பலை தடுத்தார். ஆனாலும் அந்த கும்பல் விடவில்லை. செல்வத்தை வெட்ட பாய்ந்தனர். இதில் அவருக்கு இடது தோள்பட்டை மற்றும் கையில் வெட்டு விழுந்தது.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் துப்பாக்கியால் 2 முறை சுட்டார். குண்டுகள் குறி தவறியதால் ரவுடி கும்பல்கள் மீது படவில்லை. அதன்பின்னரே கும்பல் அங்கிருந்து தப்பியது.

திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதால் அப்பகுதியினர் வீடுகளில் இருந்து வெளியில் ஓடிவந்தனர். படுகாயமடைந்த செல்வத்தை ஆம்புலன்ஸ் மூலம் சி.எம்.சி. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இரவு 10.30 மணியளவில் அவர் வீடு திரும்பினார்.

சம்பவம் நடந்த இடத்தை டி.ஐ.ஜி. வனிதா, எஸ்.பி. பகலவன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இன்ஸ்பெக்டர் அறிவழகன், ஜி.ஜி. செல்வம் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.

கொலை செய்ய முயன்ற கும்பலில் 4 பேரை செல்வம் அடையாளம் கூறினார். அவர்கள் தோட்டப்பாளையத்தை சேர்ந்த ரவுடி குப்பனின் கூட்டாளிகள் பிரதாப் (30), சசி(29), சின்னஅப்பு, ஓல்டு டவுனை சேர்ந்த பாலா என்கிற சதீஷ் (30) எனத் தெரியவந்துள்ளது.

அவர்களுடன் வந்த மேலும் 2 பேர் அடையாளம் தெரியவில்லை. நேரில் பார்த்தால் மற்ற இருவரையும் அடையாளம் காட்ட முடியும் என செல்வம் தெரிவித்துள்ளார்.

பிரதாப், சசி, சதீஷ் 3 பேரும் ஜி.ஜி.ரவி கொலை வழக்கில் கைதானவர்கள். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இவர்களது தலைவன் குப்பன் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

செல்வம் தோட்டப்பாளையத்துக்கு வந்ததை அறிந்ததும் அவரை கொல்ல முடிவு செய்து வந்துள்ளனர். போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதால் அவர் உயிர் தப்பினார்.

இந்த சம்பவத்தை அடுத்து செல்வம் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ரவுடி குப்பன் கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com