

திருவள்ளூர்:
பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 580 மாணவர்கள், 22 ஆயிரத்து 107 மாணவிகள், தனித்தேர்வர்கள், 2 ஆயிரத்து 348 என மொத்தம் 45 ஆயிரத்து 35 பேர் எழுதுகின்றனர்.
இதற்காக 128 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்விற்காக, 18 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் 33 வழித்தடங்கள் அமைக்கப்பட்டு எடுத்துச் செல்ல 64 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வினாத்தாள்கள், அந்தந்த கட்டுக்காப்பு மையங்களில் வைக்கப்பட்டு, ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் நரம்பியல் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு தேர்வு எழுத சலுகையாக கூடுதலாக ஒரு மணிநேர சலுகை 119 மாணவர்களுக்கும், சொல்வதை எழுதுவோர் சலுகை 88 மாணவர்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குனரால் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
தேர்வு மையங்களில், மின் விளக்குகள், மின்விசிறிகள் நல்ல முறையில் இயங்கவும், சுகாதாரமான குடிநீர் வழங்கவும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. குறைகள் ஏதாவது இருப்பின், 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
புழல் மத்திய சிறையில் தனித்தேர்வர் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு, 126 சிறை கைதிகள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
மேலும் பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில், 28 பேர் எழுதுகிறார்கள். முகப்பேர் நேத்ரோத்யா சிறப்பு பள்ளியில் 5 பேர் தேர்வு எழுதுகின்றனர். #Plus2Exam