ஜோலார்பேட்டை வீட்டில் பேரறிவாளன் 2 நாளில் 300 பேருடன் சந்திப்பு

ஜோலார்பேட்டை வீட்டில் பேரறிவாளன் கடந்த 2 நாளில் 300 நபர்களை சந்தித்தார். அவரது வீட்டின் அருகே இருந்த வெளியூர் நபர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஜோலார்பேட்டை வீட்டில் பேரறிவாளன் 2 நாளில் 300 பேருடன் சந்திப்பு
Published on

ஜோலார்பேட்டை:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, பேரறிவாளன் கடந்த 26 ஆண்டுகளாக வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

பேரறிவாளன், தனது தந்தை ஞானசேகரன் என்கிற குயில் தாசனுக்கு உடல் நலம் சரியில்லாததால் பரோலில் விடுவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 24-ந் தேதி இரவு பேரறிவாளன் 30 நாள், அதாவது ஒரு மாத பரோலில் விடுதலையானார். பேரறிவாளனுக்கு ‘எஸ்காட்’ போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை கே.கே.சி.தங்கவேல் தெருவில் உள்ள வீட்டிற்கு பேரறிவாளனை, துப்பாக்கி பாதுகாப்புடன் போலீசார் அழைத்துச் சென்றனர்.

26 ஆண்டுகளுக்கு பிறகு பரோலில் வெளி உலகை பார்க்கும் வாய்ப்பு பேரறிவாளனுக்கு கிடைத்த போதிலும், வீட்டை விட்டு வெளியில் செல்ல அவருக்கு அனுமதியில்லை.

பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று தினசரி கையெழுத்து போட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி, பேரறிவாளன் வீட்டிற்கு போலீசாரே நேரில் சென்று 3-வது நாளாக இன்றும் கையெழுத்து வாங்கினர்.

இதற்கிடையே, பேரறிவாளனை நேற்று முன் தினம் மட்டும் உறவினர்கள், நண்பர்கள் என 233 பேர் சந்தித்தனர். நேற்று 67 பேர் சந்தித்து பேசினர்.

கடந்த 2 நாட்களில் மட்டும் மொத்தம் 300 நபர்கள் சந்தித்துள்ளதாக போலீசார் பதிவு செய்துள்ளனர்.

பேரறிவாளன் வீட்டுக்கு அருகே தங்கியிருந்த வெளியூர் நபர்களின் விவரங்களை சேகரித்த போலீசார், அனைவரையும் நேற்று மாலையே ஜோலார்பேட்டையில் இருந்து வெளியேற்றினர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- ‘‘தந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு உடன் இருக்கவே பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. நண்பர்களை சந்தித்து பேச அல்ல’’ என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com