

என்.ஜி.ஓ.காலனி:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள அம்மன்புரத்தை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 29).
இவர் தெங்கம்புதூர் அருகே உள்ள குளத்துவிளை பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளார். இவருடன் அவரது ஊரை சேர்ந்த நண்பர்கள் சிலரும் தங்கி உள்ளனர். இவர்கள் அனைவரும் குமரி மாவட்டத்தில் தேங்காய் வெட்டும் தொழிலாளிகளாக பணியாற்றி வந்தனர்.
இவர்கள் தினமும் தேங்காய் வெட்டி விட்டு வந்தபிறகு அந்த பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் செல்வது வழக்கம். நேற்று மாலையும் சந்தன குமார் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் தெங்கம் புதூரில் இருந்து காட்டேற்றி செல்லும் வழியில் உள்ள பறக்கை குளத்திற்கு குளிக்கச் சென்றனர்.
அவர்கள் அனைவரும் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது சந்தனகுமார் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினார். தங்களது கண் எதிரே நண்பர் தண்ணீரில் மூழ்குவதை பார்த்ததும் அவரை காப்பாற்ற மற்றவர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் சந்தனகுமாரை காப்பாற்ற முடியவில்லை. இதைத்தொடர்ந்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு இதுபற்றி தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் தேடுதல் வேட்டைக்குபிறகு சந்தனகுமார் பிணமாக மீட்கபட்டார்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பையா தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.